ஷேக்ஸ்பியர் சொன்னது போல, உலகமெனும் நாடக மேடையில் நாமெல்லாம் நடித்துக் கொண்டிருக்கிறோம். அதிர்ஷ்டவசமாக இதில் கதாபாத்திரங்கள் முன்னதாகவே தீர்மானிக்கப்படுவதில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் கேட்கும் வார்த்தைகள், நம் அனுபவங்கள் நம்மைப் பற்றிய நம்பிக்கைகள் ஆகின்றன. அந்த நம்பிக்கைகள் நமக்கு அடையாளத்தைத் தருகின்றன. அந்த அடையாளம் நம் கதாபாத்திரத்தை வடிவமைக்கிறது. அன்பான கணவன், நேர்மையான காவல்துறை அதிகாரி என எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் இது பொருந்தும். எழுத்தாளனுக்கும் பொருந்தும்.
பள்ளி படித்த காலத்தில், நான் வசித்த பகுதியிலிருந்த முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கொண்டாடப்பட்டது. திருவிழாக்களுக்குப் பிட் நோட்டீஸ்கள் அடிப்பது வழக்கம். அதற்கு அச்சகங்களில் ஒரு டெம்ப்ளேட் இருக்கும். நான் புதுமையாக இருக்கட்டுமென அரை பக்கத்துக்கு முருகனைப் பற்றி எழுதி விழா அமைப்பாளரிடம் கொடுத்தேன். அதைப் பார்த்த அவர், ‘உனக்கு ஓரளவு எழுத வருகிறது’ என்றார். சொன்னது மட்டுமில்லாமல், அந்த வருட பிட் நோட்டீஸிலும் அதைச் சேர்த்துக்கொண்டார்.
அதன்பிறகு சமூக வலைத்தளங்களில் எழுதியபோது பல நண்பர்கள் பாராட்டியிருக்கிறார்கள். சுயமுன்னேற்றக் கொள்கைகளுக்காக ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை விட்டு முழுமையாக வெளியேறினேன். சில வாட்ஸப் குழுக்களில் மட்டும் அவ்வப்போது எழுதி வந்தேன். அங்கு ஒரு நண்பர் என் எழுத்தைப் பாராட்டி, பாராவின் இணையவழி எழுத்துப் பயிற்சி வகுப்பில் சேரும்படி சொன்னார். அந்த யோசனை சரியாகப் பட்டதால் சேர்ந்தேன். பாரா ஒவ்வொரு குழுவிலும் தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து ‘மெட்ராஸ் பேப்பர்’ இதழில் எழுத வாய்ப்புக் கொடுப்பார். நான் அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.















Add Comment