சென்னையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம் இனி டிஜிட்டல் முறையில் மட்டுமே இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் வளாகத்திலுள்ள நூலகக் கட்டடம் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது. அங்குள்ள புத்தகங்களை ஏற்கெனவே பதிவு செய்த உறுப்பினர்கள் மட்டும் சலுகை விலையில் பெற்றுக்கொள்ளலாம். சென்னையின் மிக முக்கியமான அறிவு அடையாளங்களில் ஒன்றாக இருந்த இந்த நூலகம் மூடப்படுவது புத்தக ஆர்வலர்களிடையே அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரிட்டிஷ் அரசால் 1934இல் பிரிட்டிஷ் கவுன்சில் தொடங்கப்பட்டது. முதலில் பிற நாடுகளில் ஆங்கிலக் கல்வியை ஊக்குவிப்பதுதான் அதன் முதல் நோக்கம் என்று சொல்லப்பட்டது. அதனோடு சேர்த்து கலாசாரப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. கம்யூனிசமும் தீவிர தேசியவாதமும் வளர்ந்து வந்த காலம் அது. ஆகவே மறைபொருளாக இங்கிலாந்தின் கொள்கைகளைப் பரப்புவதற்காக உருவாக்கப்பட்டது என்ற விமர்சனங்களும் அப்போது எழுந்தன. தொடங்கப்பட்டபோது ‘வெளியுறவுகளுக்கான பிரிட்டிஷ் குழு’ (British Committee for Relations with Other Countries) என்பதே அதன் பெயராக இருந்தது. தொடங்கிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டிஷ் கவுன்சில் என்ற பெயர் சூட்டப்பட்டது.















Add Comment