இந்திய ராணுவத்தின் வருகை இலங்கையில் பெரும் புயலை ஏற்படுத்திக் கொண்டிருந்ததை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். இந்திய ராணுவத்தின் பிரசன்னத்துடன், ‘நீங்களே புலிகளைக் கட்டி மேயுங்கள்’ என்று இலங்கை ராணுவம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து வெளியேறிவிட்டது. புலிகளுக்கோ எந்த வித்தியாசமும் விளங்கவில்லை. முன்னர் இலங்கை ராணுவம் இருந்த இடத்தில் இப்போது இந்திய ராணுவம் அவ்வளவுதான்.
அப்போது பிரதான எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிறுத்துப் பலவீனமாய் இருந்தது. ஜே.ஆர். ஆட்சிக்கு எதிராக ஒரு கண்டன அறிக்கை வெளியிடவே நாக்கு குளறிக் கொண்டு இருந்தது. இந்தியத் தலையீடு ஜே.ஆர். ஆட்சி மீது சிங்கள மக்களுக்கு ஏற்படுத்திய வெறுப்பை நன்கு கவனித்த மகிந்த ராஜபக்சே ‘இதுதான் தருணம்’ என்று தீர்மானித்தார். இலங்கை – இந்திய ஒப்பந்தமானது இலங்கையின் இறையாண்மைக்கும், அரசியல் சாசனத்திற்கும் செய்த மிகப்பெரும் துரோகம் என்றும், இலங்கையானது இந்தியாவின் இருபத்தொன்பதாவது மாநிலமாய் மாறிவிட்டதாகவும் பிரசாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டார் மகிந்த. ஜே.ஆரின் ஆறில் ஐந்து பலம் மிக்க ஆட்சி மீது இதுநாள் வரை பிணைந்திருந்த அச்ச விலங்கு அத்தோடு அறுந்து விழுந்தது. கட்சித் தலைவி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்கு விசுவாசமிகு பிரிகேடியர் போல மாறிப் போன மகிந்த, தினமொரு பேரணி என்றும் ஆர்ப்பாட்டம் என்றும் கொழும்பு மாநகரைக் கலக்கி எடுக்கத் தொடங்கினார்.
Add Comment