இலங்கைக் குடியரசில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதும், பேணி வளர்ப்பதும் அரசாங்கத்தின் கடமை. இது இலங்கை அரசியலமைப்பின் இரண்டாவது அத்தியாயம். பௌத்தமே எல்லாவற்றுக்கும் மேலானது என்று இதனூடாக நிறுவப்படுகிறது. அதாவது பௌத்த மதத்திற்கு அரசியலமைப்பில் தனி இடம் உள்ளது, ஆனால் ஏனைய மதங்களுக்கு பொது இடம்தான்.
ஞாயிற்றுக்கிழமை இரவு கடந்தால் அந்த இடம் தமது கையை விட்டுப் போய்விடும் என்று அந்தத் தேரருக்குத் தோன்றியது. தம்முடன் இருந்த பிக்குகளையும், அந்தப் பகுதியில் இருந்த சிங்கள மக்களையும் அழைத்துக் கொண்டார். ஒரு பெரிய புத்தர் சிலையைத் தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள். கடற்கரையை அண்மித்த அந்தக் காணியில் சிலையைப் பிரதிஷ்டை செய்வதே அவர்களின் நோக்கம். எல்லாம் திட்டமிட்ட ஏற்பாடு. இரவு என்பதால் மக்கள் கூடுவதற்கு முன்னர் வேலையை முடித்துவிடலாம் என்று எண்ணித்தான் அந்த நேரத்தைத் தெரிவு செய்திருந்தார்கள் பிக்குகளும் மற்றவர்களும்.
திருகோணமலை ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதி திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர். 2004க்கு முன்னர் திருகோணமலைக் கடற்கரையை மிக அண்மித்த அந்த இடத்தில் ஒரு விகாரை இருந்தது என்பது அவரது வாதம். சுனாமியால் அது அழிவடைந்துவிட்டது. பின்னர் எவரும் அதைப் புனரமைக்க முன்வரவில்லை. விகாரையை மீள நிர்மாணிக்கப் பணம் தேவைப்பட்டது. அதற்காக விகாரைக்குச் சொந்தமான காணியில் ஒரு ஹோட்டலை நடத்த விகாரை நிர்வாகம் அனுமதிக்கிறது.















Add Comment