தென்கிழக்கு ஐரோப்பாவில் பால்கன் தீபகற்பத்தில் அமைந்துள்ள நாடான பல்கேரியாவின் சில கிராமப்புறப் பகுதிகளில் “மணப்பெண் சந்தை” நடக்கிறது. பல்கேரிய மொழியில் இதை “பாசார் நா புலகி” என அழைக்கிறார்கள்.பெரும்பாலும் ரோமா சமூகத்தினரிடையே பல நூற்றாண்டுகளாக இச்சந்தை நடைபெற்று வருகிறது.
பல்கேரிய மானுடவியலாளர் அலெக்ஸி பாம்போவ் (Alexei Pamporov) 2003இல் வெளியிட்ட ஆய்வின்படி, இந்தச் சந்தை தோராயமாக, பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியுள்ளது.
வரலாற்று ரீதியாக, ரோமா சமூகங்கள் இந்தியாவிலிருக்கும் ராஜஸ்தான் பகுதிகளிலிருந்து ஐரோப்பா சென்ற நாடோடிகள். பல்வேறு இடங்களில் சிதறி இருக்கும் ரோமாக்கள் ஒன்றுகூட, இந்த மணப்பெண் சந்தைகள் ஒரு முக்கியமான தளமாக இருந்துள்ளன. ரோமா சமூகங்களின் குறிப்பிட்ட பிரிவுகள் மட்டுமே இன்றும் இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றன.
சோவியத் காலகட்டத்தில் (1944-1989) பல்கேரியாவில் இந்த நடைமுறை ஒடுக்கப்பட்டாலும், கம்யூனிச ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு மீண்டும் வழக்கத்துக்கு வந்தது.
Add Comment