கார் இன்ஜின் இயங்கத் தொடங்கிய சத்தம் கேட்டதும் மொட்டை மாடியில் நின்று கவனித்துக் கொண்டிருந்த நான், முச்சந்தியில் தயாராக நின்ற கூட்டாளியை நோக்கி சைகை செய்தேன். ‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்பது போல அவன் பதில் சைகை செய்தான். கார் முச்சந்தியைக் கடந்து சிறிது தூரம் சென்றதும் அவன் சைக்கிளைத் திருப்பி வேகமாக வந்தான். அவன் சைக்கிளைத் திருப்பினால் இனி பிரச்சனை இல்லை, களத்தில் இறங்கலாமென அர்த்தம். நான் கீழே இறங்கிப் போனேன். வெவ்வேறு இடங்களில் நின்று இதைக் கவனித்துக் கொண்டிருந்த மற்றவர்களும் வந்து சேர்ந்தார்கள்.
சுற்றிலும் நோட்டமிட்டோம். யாரும் எங்களைக் கண்டுகொள்ளவில்லை. காம்பவுண்டிலிருந்த ஓட்டை வழியாக ஒவ்வொருவராக உள்ளே செல்ல வேண்டும். செல்வத்தை முதலில் அனுப்பியது தவறு. அந்தக் குண்டன் அதிகமான நேரத்தை எடுத்துக்கொண்டான். நாங்கள் ஆட்கள் அதிகமாக இருந்தோம். நேரம் மிகக் குறைவாக இருந்தது. பதற்றம் தொற்றிக்கொண்டது. ஒருவழியாக செல்வம் உள்ளே சென்றுவிட்டான். அவனைத் தொடர்ந்து நாங்களும். ரஞ்சித் மட்டும் வெளியே நின்று சிறிது நேரம் கண்காணிப்பான். எந்த ஆபத்தும் இல்லையென உறுதிசெய்தபின் அவனும் உள்ளே வந்துவிடுவான். இதுதான் திட்டம்.















Add Comment