தீபாவளி, புத்தாடை, தின்பண்டம், கொண்டாட்டம் இவை எப்படி ஒன்றோடு ஒன்று இணைந்ததோ அதுபோலத் தான் திரைப்படங்களும் தீபாவளியும். தீபாவளி வெளியீடு என்பது திரைத்துறையில் மிக முக்கியமான ஒரு நிகழ்வு. இது இன்று நேற்று ஏற்பட்டது அல்ல. 1944-இல் துவங்கியது. அந்தத் தீபாவளிக்குத் தான் தமிழ்த் திரையுலகின் அசைக்கமுடியாத சாதனையாக இருக்கும் ‘ஹரிதாஸ்’ படம் வெளியானது. சென்னை பிராட்வே திரையரங்கில் 110 வாரங்கள் 810 நாட்கள் மூன்று தீபாவளி கடந்து ஓடிச் சாதனை படைத்த படம் ஹரிதாஸ். அதன் பிறகு ஒவ்வொரு தீபாவளியும் திரைத் துறையினருக்குப் பணம் கொழிக்கும் ஒரு வாய்ப்பாக மாறத்துவங்கியது.
இந்தியா முழுதும் பரவலாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் தீபாவளிக்கு தமிழக மக்களிடையே ஒரு தனி எதிர்பார்ப்பு உண்டு. போனஸ், உறவினர் வருகை, விதவிதமான பலகாரங்கள் இவற்றோடு தங்கள் அபிமான நடிகர்களின் படங்களையும் இவர்கள் ஆவலாக எதிர்பார்ப்பது வழக்கம். மக்களுக்கு வேறு விதமான பொழுதுபோக்குகள் இல்லாத அந்தக் காலத்தில் சினிமா அவர்களைக் கட்டியிழுத்து வைக்கும் ஒரு ஈர்ப்பாக இருந்தது. ஐம்பதுகளில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் மக்கள் முதல் நாள் இவர்கள் படங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டினார்கள். “புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து விட்டுப் பலகாரம் உண்டு காலைக் காட்சிக்குத் தயாராவது எங்கள் வழக்கம். அப்பொழுதெல்லாம் இன்றைய நாட்கள்போல அதிகாலைக் காட்சிகள் எல்லாம் கிடையாது. காலை, மதியம், மாலை, இரவு என நான்கே காட்சிகள் தான். டிக்கெட் விலை 54-65-86 பைசாக்கள். 1.15, 1.70 மற்றும் வசதி படைத்தவர்கள் அமரும் சோபா டிக்கெட் ரூ 2.30. மகளிருக்கு சிறப்புச் சலுகையாக 31 பைசா டிக்கெட்கள் கொடுப்பது வழக்கம்” என்றார் சினிமா ஆர்வலரும், திரைப்படங்களைக் கூர்ந்து கவனித்து வருபவருமான 75 வயது கணேசன்.
Add Comment