இன்றைக்குக் கிரிக்கெட்டில் நடுவர்களாகச் செயல்பட்டு வருவோர், ஒருமுறையேனும் தங்களது சர்ச்சைக்குரிய தீர்ப்பால் வீரர்களின் அதிருப்தியைச் சம்பாதித்திருப்பார்கள். ஆனால் ஒருமுறைகூட அதுபோன்ற புகாரை எதிர்கொள்ளாத ஒரு நடுவரும் இருந்தார். எழுபது, எண்பதுகளின் கிரிக்கெட் ரசிகர்களுடைய மனங்களில் நீங்கா இடம்பிடித்திருந்த அவரது பெயர், ஹெரால்ட் டென்னிஸ் பேர்ட் (Harold Dennis Bird). செல்லமாக டிக்கி பேர்ட் (Dickie Bird). அனைவரது அபிமானத்துக்கும் உரித்தவரான டிக்கி பேர்ட், கடந்த செப்டம்பர் 22ஆம் தேதியன்று தொண்ணூற்று இரண்டு வயதில் இயற்கை எய்தினார்.
1933 ஏப்ரல் மாதம் இங்கிலாந்திலுள்ள யார்க்ஷயரில் ஒரு குப்பத்தில் பிறந்தார் டிக்கி பேர்ட். ஜேம்ஸ் ஹெரால்ட் பேர்டின் மூன்று குழந்தைகளில் அவரே மூத்தவர். நிலக்கரிச் சுரங்கமொன்றில் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றிவந்தார் ஜேம்ஸ். டிக்கி பேர்டுக்குப் படிப்பு ஏறவில்லை. தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலேயே படிப்புக்கு முழுக்குப் போட்டார். பிறகு சிறிது காலம் தன்னுடைய தந்தையுடன் நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்துவந்தார். தன்னைப்போலத் தன் மகனும் சுரங்கத்தில் கஷ்டப்படுவதை ஜேம்ஸால் சகிக்க முடியவில்லை. தன் மகன் ஒரு விளையாட்டு வீரனாக வேண்டுமென்று ஆசைப்பட்டார்.
டிக்கியும்கூட இந்த வேலை தனக்கானதல்ல, விளையாட்டில்தான் தனக்கான எதிர்காலம் உள்ளது என்பதை விரைவிலேயே உணர்ந்தார். அவருக்குக் கால்பந்திலும் கிரிக்கெட்டிலும் ஈடுபாடு இருந்தது. ஆனாலும் கால்பந்தையே தனது முதல் காதலியாகக் கருதினார். கால்பந்தில் தீவிரமாகக் கவனம் செலுத்தத் தொடங்கினார். ஆனால் விதி வேறுவிதமாக இருந்தது.















Add Comment