தீபாவளி வந்தாலே அனைத்து வணிகங்களும் பரபரப்பாகிவிடும். தேசிய அளவில் முக்கியமான பண்டிகை என்பதால் விளம்பரங்களும் போட்டிகளும் அதிகரித்திருக்கும். புதிய அறிமுகங்கள், சலுகைகள், கவர்ச்சிகரமான பரிசுகள் என நிறுவனங்கள் தங்கள் முக்கியத்துவத்தை அறிவிக்க முந்தி நிற்கும். இதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் ஊடகங்கள் அச்சு, தொலைக்காட்சி, இணையம், வானொலி, சுவர் விளம்பரங்கள், ஹோர்டிங்குகள் எனப் பலவகை.
ஊடகங்களும் இந்தப் போட்டியில் சளைத்தவையில்லை. அவர்களுக்கும் தீபாவளி முக்கியமான வருமான ஆதாரம். ஊடகங்களின் ஓராண்டு வருமானத்தில் பண்டிகைக்கால வருமானத்துக்கு மிக முக்கியப்பங்குண்டு. எனவே ஒவ்வொரு ஊடகமும் தங்களுக்கான விளம்பர இலக்குகளை நிர்ணயிக்கும். கடந்த ஆண்டு கிடைத்த விளம்பர வருவாயைவிட இந்தாண்டு எவ்வளவு சதவீதம் உயர்த்தலாமென ஆலோசிக்கப்படும். அப்படித்தான் ஊடகங்கள் இந்தத் தீபாவளியையும் அணுக நினைத்தன.
ஆனால் இந்தாண்டு நிலைமையே வேறு. ஒரு தொலைக்காட்சியைச் சேர்ந்த விற்பனை மேலாளர், மிகப்பெரிய ஒரு நகைக்கடை உரிமையாளரிடம் தீபாவளிக்கான விளம்பர ஒப்பந்தம் போட்டிருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் அதற்கான ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டு வாங்க வேண்டியவர், அந்த நிறுவனம் சொன்னதால் அக்டோபர் முதல் வாரத்தில் சென்றார். அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறி நிற்கும் இந்த நிலையில் அந்த அளவு விளம்பரம் செய்வது லாபகரமாக இருக்காது என்று அந்தக் கடையின் உரிமையாளர் கருதினார். எனவே தீபாவளி விளம்பரங்களே தேவையில்லை என்று அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டார்.















Add Comment