இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்தில் வீழ்ந்த லட்சுமணனையும், வானர சேனையையும் காக்க, ஆஞ்சநேயர் இமயமலைப்பகுதியிலிருந்து துரிதமாக சஞ்சீவிமலையைத் தூக்கிவந்து மூலிகை வைத்தியம் செய்ததை சிறுவயதிலிருந்தே கதைகளாகக் கேட்டிருக்கிறோம்.
பத்துத் தலை, புஷ்பக விமானம், நீண்ட வால் சிம்மாசனம் போல அதையும் இன்னொரு மாயாஜால உருவகமாகத்தான் பார்த்து வந்திருப்போம். இப்போது பாண்டிச்சேரியின் ஜிப்மர் (JIPMER – Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research) மருத்துவமனையிலிருந்து, சற்று தொலைவிலுள்ள மண்ணாடிப்பட்டு என்கிற கிராம மருத்துவமனைக்கு ட்ரோன் விமானம் அவசர சிகிச்சைக்கு மருந்து விநியோகம் செய்யச் சோதனை ஓட்டம் செய்துள்ளது. சட்டெனச் சஞ்சீவிமலை சம்பவம் நினைவுக்கு வராமலில்லை, இல்லையா?
இப்படி நாங்களும் ஹனுமான்கள்தான் என்று உயிர்காக்கும் மருந்துகளை துரிதகதியில் சென்று சேர்க்க ட்ரோன்களைப் பயன்படுத்தும் திட்டத்தின் சோதனை ஓட்டமாகவே இதனை நிகழ்த்தியிருக்கிறது ஜிப்மர் மருத்துவமனை. வருங்காலத்தில், வளர்ச்சியில் பின்தங்கிய கிராமங்கள், சாலை வசதி மேம்படுத்தப்படாத தூரப் பிரதேசங்களுக்கெல்லாம் மிக விரைவாக மருந்து அனுப்பும் கருவியாக இதனை மாற்றும் திட்டங்களும் அவர்களிடம் உள்ளதாகக் கூறுகிறார்கள்.
Add Comment