ஈக்வடாரின் மிகவும் ஆபத்தான கிரிமினல் குழுக்களில் ஒன்றாகக் கருதப்படும் லாஸ் சோனெரோஸ் (Los Choneros) தலைவர் ஃபிட்டோ (Fito) ’மீண்டும்’ கைது செய்யப்பட்டிருக்கிறார். முப்பத்து நான்கு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி அவர். 2024ஆம் ஆண்டு சிறையிலிருந்து தப்பித்துச் சென்றார். இப்போது ராணுவம், காவல்துறை இரண்டின் கூட்டு நடவடிக்கையில் பிடிபட்டிருக்கிறார். ராணுவப் பாதுகாப்புடன் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட இருப்பதாக ஈக்வடார் அரசு அறிவித்திருக்கிறது. யார் இந்த ஃபிட்டோ? எதற்காக ஒரு தனிமனிதன் இத்தனை ஆபத்தானவனாகக் கருதப்படவேண்டும்?
தென் அமெரிக்காவில் பசிபிக் பெருங்கடலின் ஓரமாய் ஒரு பெரிய சங்கு வடிவில் அமைந்திருக்கிறது ஈக்வடார் நாடு. வடக்கே கொலம்பியாவும், தெற்கே பெரூவும் நெருக்கி, மேலும் கீழும் சற்றே நசுங்கிய சங்கு. ஈக்வடார் என்ற பெயர், சில தசாப்தங்களுக்கு முன்பு வரை நமக்குக் கால்பந்துப் போட்டிகள் நடக்கும் காலத்தில்தான் நினைவுக்கு வரும். சமீப நாள்களில் இரண்டு பிரபலங்களால் அது இந்தியர்கள் நன்கு அறிந்த நாடாக மாறியது.
ஒருவர் நித்தியானந்தா. அவர் குடியேறியிருக்கும் கைலாசா, ஈக்வடாரின் தீவுகளில் ஒன்றுதான் என்பது பிரபலமான கிசுகிசு. விக்கிலீக்ஸ் என்கிற பெயரில் அமெரிக்காவின் போர்க்கால ஊழல்கள், ராணுவ ரகசியங்களின் பட்டியலை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்திய ஜூலியன் அசாஞ்சே இரண்டாவது பிரபலம். அவருக்கு எதிராக அமெரிக்கா கைது உத்தரவைப் பிறப்பித்தபோது தயக்கமேயின்றி லண்டனில், ஈக்வடார் தூதரகத்திற்குப் போய் அடைக்கலம் கேட்டார். அதற்காகவே காத்திருந்தது போல அவரை அரவணைத்துக்கொண்டது அந்நாடு. இப்படிப் பிரபலங்களுக்கு அடைக்கலம் கொடுத்தே பிரபலமானது ஈக்வடாரின் பெயர். கடந்த சில வருடங்களாக சொனேரோஸின், ஃபிட்டோவின் தயவால் தலைப்புச் செய்திகளில் நீக்கமற நிறைந்திருக்கிறது.















Add Comment