அதிமுக தன்னுடைய தேர்தல் வியூகத்துக்கு உதவ ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரமன்யா கன்சல்டன்சியை நியமித்துள்ளது. கட்சிக் கூட்டணிக்கு முன்பு, தேர்தல் வியூகம் வகுக்கும் நிறுவனங்களுடன் கூட்டு வைப்பதுதான் முதல்படி என்றாகிவிட்ட காலம் இது. திமுக, ஒன்றுக்கு மேற்பட்ட தேர்தல் வியூக நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளது. கேட்டவுடன். பிடித்துப்போகும் கட்டழகு வாசகங்களுடன் தமிழ்நாட்டின் எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் பரப்புரையைத் தொடங்கிவிட்டன. அனைத்தின் பின்னணியிலும் ஒரு நிறுவனம் இருக்கிறது.
இந்திய அரசியலின் அண்மைக்கால வரவு இந்தத் தேர்தல் வியூக வடிவமைப்பு நிறுவனங்கள். இவை கால்பதித்துக் கால் நூற்றாண்டு காலம் ஆகிவிட்டது. முதன்முதலாகத் தோன்றிய தேர்தல் வியூக நிறுவனம் எனத் தோராயமாக விப்லவ் கம்யூனிகேஷனைச் சுட்டலாம். ஐஐடி கான்பூரில் படித்து அமெரிக்காவில் பல்லாண்டு காலம் வேலை பார்த்துத் திரும்பியவரால் ஆரம்பிக்கப்பட்டது. தேர்தல் பரப்புரைக்குத் தரவுகளையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தலாம் என்பதைக் கணித்து அந்நிறுவனத்தைத் தொடங்கினார் பல்லவ் பாண்டே.
2003ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், 2004 இந்தியப் பொதுத் தேர்தல் முதல் தன் சேவையைத் தரத் தொடங்கியது. அப்போது இணையத்தைவிடத் தொலைப்பேசி மூலம் வாக்காளர்களைச் சென்றடைவதே சிறந்த வழியாக இருந்தது. அரசியல்வாதிகளின் குரல்களில் பதிவு செய்யப்பட்ட செய்திகள் பல லட்சம் வாக்காளர்களைச் சென்றடைய விப்லவ் நிறுவனம் உதவியது. அப்போது இதையெல்லாம் புரிய வைப்பதே கடினம்தான். ஜோதிராதித்ய சிந்தியா, நவ்ஜோத் சிங் சித்து போன்ற செல்வாக்கான அரசியல்வாதிகள்தான் முதலில் இப்புதிய யோசனைகளை முயன்று பார்த்தனர். அவர்கள் பெற்ற வெற்றி இந்நிறுவனத்தின் முகவரிச் சீட்டானது. 2009 தேர்தலில் ஒடிஷாவில் நவீன் பட்நாயக்கின் வெற்றிக்கு இவர்களே சொந்தம் கொண்டாடினார்கள்.















Add Comment