சூரியனை ஃபோட்டோ பிடிப்பதற்காக ஒரு விஷேட கருவியைத் தயார் செய்தது ஏஸா (ESA). அமெரிக்காவுக்கு நாஸா போல, ஐரோப்பியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம், ஏஸா. அந்தக் கருவியின் பணி, நேராக சூரியனுக்கு எவ்வளவு பக்கத்தில் போக முடியுமோ, அவ்வளவு நெருங்குவது. பின்னர் எல்லாக் கோணத்திலும் புகைப்படம் எடுத்துத்தள்ளுவது. கொடுத்த வேலையை திறம்படச் செய்திருக்கிறது அந்த சோலார் ஆர்பிடர். இதுவரை அறிவியல் உலகம் காணாத ஒரு புகைப்படத்தைப் பிடித்து, ‘இந்தா பார்’ என்று அனுப்பி வைத்திருக்கிறது. சூரியனின் தென் துருவத்தின் படம்!
இப்போதெல்லாம், ஒரு புகைப்படத்தின் பெறுமதி சில கணங்களுக்குத்தான். அடுத்தடுத்து பற்பல புகைப்படங்கள் வந்து முன்னதை பின் தள்ளிக்கொண்டே இருக்கும். இதற்கு, ‘தகவலின் பொன் விதி’ என்று சொல்வார்கள். ஒரு தகவல் உருவான கணத்தில் மட்டுமே மிகப் பெறுமதி வாய்ந்தது. நேரத்துடன் அது குறைந்து, பூச்சியத்துக்கே வந்து விடும். அப்படியிருக்க, சூரியனின், அதுவும் அதன் தென்துருவத்தின் புகைப்படத்துக்கு என்ன முக்கியத்துவம் இருக்கப் போகிறது. அங்கேதான் ஒரு சிறு வித்தியாசம் .
அறிவியல் சம்பந்தப்பட்ட புகைப்படங்களின் நிலை, சாதாரண நடிகர்களின் படங்களைவிட முற்றிலும் வேறுபட்டது. அறிவியலாளர்கள் இப்படியான ஒரு படத்தை பல வருட ஆராய்ச்சிக்கான திறவுகோலாகவும், நற்செய்தியாகவும் கருதுவார்கள். இந்த சூரியனின் படமும் அப்படித்தான். “விண்வெளிக்கான படிக்கட்டு” என்று பெயரிட்டு ஆராவாரம் செய்கின்றனர் விண்வெளி விஞ்ஞானிகள்.














Add Comment