ஹால்யு
தென் கொரியாவில் ஒரு பெரிய ஃபேஷன் நிறுவனத்தின் தலைவியாக இருக்கிறாள் யூன் சே-ரி. ஒருமுறை பாரா கிளைடிங் செய்யும்போது புயலில் மாட்டிக்கொண்டு, வட கொரிய எல்லையில் தரையிறங்குகிறாள். அவளைப் பார்க்கும் ராணுவ வீரன், அதிகாரிகளிடம் காட்டிக்கொடுக்காமல் தனது கிராமத்தில் ஒளித்து வைத்து, தாய்நாட்டுக்குத் திரும்பிச்செல்ல உதவி செய்கிறான். இருவருக்கும் இடையில் காதல் மலர்கிறது. ஆனால் இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லைக்கோடும், பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் பகையும் அந்தக் காதலுக்குக் குறுக்கே நிற்கிறது.
—
ஒரே முகத்தோற்றம் கொண்ட இரட்டையர்கள். ஒரு பெண் அநாதை விடுதியில் கிண்டல் கேலிகளுக்கு உள்ளாகி வளர்கிறாள். இன்னொரு பெண் வசதியான பள்ளியில், நல்ல மதிப்பெண்கள் எடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறாள். ஒரு விபத்தில் பணக்காரப் பெண் காணாமல் போய்விட, அநாதைப் பெண் அந்த இடத்துக்குத் தற்செயலாக வந்து சேர்கிறாள். பெரிய பள்ளியாக இருந்தாலும் அங்கேயும் மாணவர்களுக்கிடையே கேலியும் கிண்டலும் நிறைந்திருக்கிறது. சிக்கலான கல்வியும், பெற்றோர், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பும் அவளுக்குக் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
—
சிறுவர் புத்தகம் எழுதும் பெண் எழுத்தாளர் மூன் யங், பொதுவெளியில் உணர்ச்சிகளை மறைத்து இங்கிதமாக நடந்துகொள்ளத் தெரியாதவர். மனநல மருத்துவமனையில் உதவியாளராகப் பணிபுரியும் கேங்-டே, எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் மெழுகு பொம்மை போல இருப்பவர். இருவருக்குமே துயரம் நிறைந்த கடந்த காலம் இருக்கிறது. இருவரும் சந்தித்துக் கொள்கின்றனர். துயரத்தை மறைக்காமல் வெளிப்படுத்துவதன் மூலமும், உணர்வுகளை மதிப்பதன் மூலமும் ஒருவருக்கொருவர் தங்களுடைய பலவீனப் பள்ளங்களை இட்டு நிரப்பிக் கொள்கின்றனர்.














Add Comment