எட்டு விநாடிகள்
கறுப்பு, வெள்ளை, நீலம் என ஏதோ ஒரு நிறம் காதுத் துளைக்குள் பொருந்தியிருக்கும். கவனம் முழுவதும், ஒரு கையால் அலட்சியமாகப் பிடித்த செல்பேசியில் குவிந்திருக்கும். வாட்சப் குளத்தில் கட்டைவிரல் மீன் போல லாகவமாக நீச்சலடிக்கும். பதில் வரும்வரை காத்திராமல் அடுத்த நொடி இன்ஸ்டாவுக்குத் தாவும். ஸ்டோரீஸ், படங்கள், ரீல்கள் இரண்டு நொடிகளுக்கு ஒருமுறை தள்ளப்படும். இடையில் ஸ்பாட்டிஃபையில் பாடல்கள் மாறும். அல்லது டெலிகிராமில் தரவிறக்கிய கொரிய சீரியல், சப்டைட்டிலுடன் ஓடத் தொடங்கும்.
இது மெட்ரோ ரயிலில் அடிக்கடிப் பார்க்கும் காட்சி. ஐந்து விநாடிகளுக்குள் நாலைந்து தளங்களுக்குத் தாவிச் செல்வதும், ஒரே தளத்தில் ஐந்து நொடிக்குள் ஐம்பது முறை படங்களை மாற்றுவதும் இவர்களுடைய இயல்பு. ஒரு விஷயத்தில் கவனத்தைக் குவித்து இவர்கள் பார்க்கும் நேரம் (அட்டென்ஷன் ஸ்பேன்) அதிகபட்சம் எட்டு விநாடிகள்தான். இது தங்க மீனின் அட்டென்ஷன் ஸ்பேனைக் காட்டிலும் ஒரு விநாடி குறைவு.
முந்தைய தலைமுறையினரைப் போல சமூக வலைத்தளங்கள் வந்ததும் அதைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டவர்கள் அல்ல ஜென் ஸீ தலைமுறையினர். அவற்றுடனே வளர்ந்தவர்கள். அவர்களுக்கு டிஜிட்டல் வாழ்க்கையும் நிஜ வாழ்க்கையும் வேறுவேறானவை அல்ல.
புது அடையாளங்களைக் கண்டடைவது, உறவுகளுடன் இணைந்திருப்பது, வேலை தேடுவது, முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்வது என அவர்களின் அன்றாடங்கள் பெரும்பான்மையாக டிஜிட்டல் தளங்களிலேயே நிகழ்கின்றன. எந்தத் தளங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர், அவற்றை எப்படிக் கையாள்கின்றனர் என்பதைக் குறித்துத் தெரிந்து கொள்வது அவர்களைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ள உதவும்.















Add Comment