அவகேடோ டோஸ்ட் முதல் கீரைவடை வரை
வெள்ளைத் தட்டில் பொன்னும் செப்பும் கலந்த நிறத்தில் டோஸ்ட் செய்து எடுக்கப்பட்ட பிரெட், மேலே இளம்பச்சை வண்ணத்தில் மசித்துத் தடவப்பட்ட அவகேடோ, அதற்கு மேல் பூத்தூவலாய் சில்லி ஃபிளேக்ஸ். அருகில் கறுப்புக் கோப்பையில், நுரையால் இலைகள் வரையப்பட்ட கேப்பச்சீனோ.
‘ஏஸ்தட்டிக் பிளாண்ட் பேஸ்டு பிரேக்ஃபாஸ்ட் அட் நுங்கம்பாக்கம்’ என்று தலைப்பிட்டு இதை இன்ஸ்டாவில் பகிர்ந்தாள் யுவராணி. பேஸ்டல் வண்ணச் சுவர்கள், அலங்காரச் செடிகள், இருக்கைகள் என கஃபேயின் உள்புறப் புகைப்படங்களையும் இணைத்திருந்தாள். இந்தப் பதிவுக்குச் சில நூறு ஹார்ட்டீன்கள் கிடைத்தன.
அதே யுவராணி, உள்ளூர் ஆடியன்ஸைக் கவர்வதற்காக மறுநாள் வியாசர்பாடிக்குச் சென்றாள். சாலையோரச் சிறுகடையில், பெரிய இரும்புச்சட்டியில் பொரித்தெடுக்கப்பட்டு, காகிதத் தட்டில் தரப்பட்ட இறால் கீரை வடையைச் சூட்டோடு கடித்தாள். கீரைவடைக்குள் நாலைந்து இறால் வைத்திருப்பதாகவும், சென்னையில் வேறு எங்குமே இப்படி ஒரு சுவையான ஐட்டம் கிடைக்காது எனவும் புகழ்ந்தாள்.
அந்த ரீலும் உடனடியாக வைரலானது. ‘எங்க ஏரியாவுக்கு ஒரு நாள் வாங்கக்கா, நிறையா ஸ்ட்ரீட் ஃபுட் இருக்கு’ என்பது போன்ற பாசக்கார அழைப்புகள் கமெண்ட்டில் குவிந்தன.














Add Comment