இந்தியாவின் இளைஞர் கூட்டம் உயர்கல்விக்காகவும், ஆராய்ச்சிக்காகவும் மேலை நாடுகளுக்குச் செல்வது தொண்ணூறுகளிலிருந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆங்கில மொழி பேசும் நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குப் பெருமளவில் மாணவர்கள் கல்வி கற்கச் சென்றுள்ளனர். சமீபகாலமாக ஆங்கில மொழி பேசும் இந்நாடுகளில் கல்விக் கட்டணம் அதிகமாக இருப்பதாலும், வேலை தேடும் காலம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாலும், கடவுச்சீட்டு (visa) கிடைக்கத் தாமதம் ஏற்படுவதாலும் மாணவர்களின் கவனம் ஐரோப்பாவின் பக்கம் திரும்பியது, குறிப்பாக அறிவியலுக்கும், தொழில்நுட்பத்துக்கும் பெயர் போன ஜெர்மனியின் மீது கவனம் திரும்பியது.
நிறைய மாணவர்கள் இளங்கலைப் படிப்பிற்காகவும், முதுகலைப் படிப்பிற்காகவும், ஆராய்ச்சிக்காகவும் ஜெர்மனி வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணம் ஜெர்மனியில் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் குறைந்த கல்விக் கட்டணம் அல்லது கல்விக் கட்டணமே அறவே இல்லாமல் உலகத் தரத்திலான கல்வி தரப்படுகிறது. இக்கல்வி ஆங்கில மொழியில் தரப்படுவதால் இந்திய மாணவர்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. இருப்பிடம், உணவு, போக்குவரத்து, மருத்துவம் ஆகிய வாழ்வாதாரத்திற்கான செலவுகள் இருப்பினும், ஜெர்மனி அரசாங்கம் மாணவர்களுக்குப் பகுதிநேர வேலை செய்ய அனுமதிப்பதால், இச்செலவுகளை மாணவர்களே தங்கள் பகுதி நேர வேலையைக் கொண்டு வாழ்வாதாரச் செலவுகளைப் பாதியளவு ஈடுகட்ட முடியும்.
Add Comment