குவாதர் சர்வதேச விமானநிலையத்தின் உரிமையாளர் பாகிஸ்தான். பணம் கொடுத்தது சீனா. பயன்படுத்த யாருமில்லை. கடந்த வாரம் முழுக்க சொல்லிவைத்தாற்போல் எல்லா செய்தித்தளங்களும் பயணிகள் யாருமில்லாத விமான நிலையம் என கேலியான தொணியில் செய்தி வெளியிட்டிருந்தன. மற்றவர்களுக்கு எப்படியோ, இந்தியா அப்படிச் சிரிப்புடன் கடந்துபோக இயலாத சீரியஸ் செய்தி அது. சீன பிஆர்ஐ திட்ட முத்துமாலையில் இணைந்திருக்கும் முக்கியமான முத்து குவாதர்.
மீனவர் நிறைந்த வணிக நகரம். குவாதர். இந்நகருக்கு பிரிட்டிஷ் இந்தியாவிடம் அலுவல் ரீதியாக முதன்முதலில் உரிமை கோரப்பட்டது 1903ஆம் ஆண்டு. கேட்டது பலுசிஸ்தானின் அன்றைய கான் ஆஃப் கலத். அதற்கு முன்பும் அவர்களிடம்தாம் உரிமை இருந்தது. ஓமானில் தந்தைக்கு எதிராக அணி திரட்டிய மஸ்கட் இளவரசர் தோற்றுப்போய் புகலிடம் கேட்டு கான் ஆஃப் கலத்திடம் வந்தார். இந்தாப்பா, இந்த குவாதர் நகரைப் பரிபாலனம் செய்து கொண்டிரு என்று இவரும் கொடுத்தார். 1783ஆம் ஆண்டு கொடுத்ததை அடுத்த ஐந்தாண்டுகளில் பறித்துக்கொண்டார். ஆனால் 1791ல் ஓமானில் ஆட்சிக்கு வந்த சயது சுல்தான், குவாதர் தங்களுடையது எனச் சொன்னார். இது தொடர்பாக இவர்கள் அவ்வப்போது சண்டையிடும் போது தந்திக் கம்பங்களை நட்டு பிரிட்டிஷும் உள்ளே வந்துவிட்டது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சுதந்திரம் கொடுத்தபோது பலுசிஸ்தான் தனிநாடாக இருக்கத்தான் விரும்பியது. 1948, மார்ச் மாதம் பாகிஸ்தானுடன் பலுசிஸ்தான் இணைந்தது தனிக்கதையாகப் போகும் வரலாறு. அதன் பிறகு, பாகிஸ்தான் குவாதர் நகரைத் தன்னுடன் இணைத்துக்கொள்ள ஆர்வம் காட்டியது. இப்போதும் சரி, அப்போதும் சரி, கரகாட்டக்கார கோஷ்டி மாதிரி ஊர் ஊராக உலகம் முழுக்கப் போவதுதான் அமெரிக்காவின் வேலை. எங்கெல்லாம் வளங்களும் வாய்ப்புகளும் இருக்கிறது எனத் தேடுவதை பல அமெரிக்க வல்லுநர்கள் முழுநேரப்பணியாகவே வைத்துள்ளனர். 1954ஆம் ஆண்டில், அமெரிக்கப் புவியியல் வல்லுநர்கள், ஆழ்கடல் துறைமுக நகரமாக குவாதரை அடையாளங்கண்டனர்.
Add Comment