“நானும் அவனும் வாழ்வது முப்பது நிமிடத் தொலைவில். நான் சுதந்திரப் பிரஜை. அவனோ சிறைக்கைதி. எனக்கு வாக்குரிமை இருக்கிறது. அவனுக்கு எந்தவித உரிமையும் இல்லை. இந்த விழா முடிந்ததும் நான் இஸ்ரேலுக்குத் திரும்பிப் போவேன். அவனோ, ஆக்கிரமிக்கப்பட்ட காஸாவுக்குள் நுழைந்திடுவான்.”
இஸ்ரேலிய திரைப்படக் கலைஞரான யுவால் ஆப்ரஹாம், இவ்வருடத்தின் சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கார் விருது பெற்ற பின்னர் மேடையில் ஆற்றிய உரையில் கூறிய சொற்கள் இவை. அவருடன் பலஸ்தீனரான ஹம்தான் பல்லாஹ்வும், இன்னும் இரு கலைஞர்களும் இணைந்து எடுத்த ஆவணப்படம் வரிசையாகப் பல சர்வதேச விருதுகளைப் பெற்றது. ஆஸ்கார் விருது விழாவில் பங்கேற்று வீடு திரும்பிய பல்லாஹ், சில தினங்களுக்குள்ளேயே இஸ்ரேலியப் படைகளால் கைது செய்யப்பட்டார்.
சில நாள்களாகவே அவர் வசிக்கும் இடமான பலஸ்தீன மேற்குக் கரையில் இஸ்ரேலியக் குடியேற்றங்களில் வசிப்போரால் பல்வேறு விதமான பிரச்னைகள் உண்டாகிக்கொண்டிருந்தன. பலஸ்தீனியர்களின் பகுதிகளில் இஸ்ரேலியக் குடியேற்றங்கள் அமைக்கப்படுவதன் முதன்மை நோக்கமே அதுதான்; இது எப்போதும் நடப்பதுதான் என்றாலும் இம்முறை அவர்களது தாக்குதல் வயதானோரையும் விட்டுவைக்கவில்லை. அங்கே வசிக்கும் அரபுப் பெண்களை வலுக்கட்டாயமாக வம்புக்கு இழுத்துத் தாக்குவதும் துன்புறுத்துவதும் அதிகரித்திருக்கிறது. இதைக் கண்டு பொறுக்காத பல்லாஹ், இக்காட்சிகளைப் படமெடுத்துள்ளார்.
Add Comment