அமெரிக்காவின் வாஷிங்டன் நகரத்தில் இரண்டு இஸ்ரேலியத் தூதரக ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்க இளைஞர் ஒருவர் நடத்திய தாக்குதலில் இவர்கள் பலியாகியுள்ளனர். பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்தக் கொலைகளைச் செய்ததாக கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.
காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் சமீப நாள்களாக தீவிரமடைந்துள்ளன. ஆபரேஷன் கிடியன்’ஸ் சேரியட் என்று பெயரிடப்பட்ட ராணுவ நடவடிக்கையைத் தொடங்கி, இஸ்ரேலியப் படைகளும், பீரங்கிகளும் போர்விமானங்களின் துணையோடு காஸா மீது குண்டு மழை பொழிந்து வருகின்றன. மொத்த காஸாவையும் கைப்பற்றும் வரை இந்தத் தாக்குதல்கள் தொடரும் என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
முன்னெப்போதையும்விடக் கடுமையாக நடைபெறும் இந்தத் தாக்குதல்களில் குடியிருப்புகளிலும், மருத்துவமனைகள் மீதும் வரைமுறையின்றி குண்டுகள் வீசப்படுகின்றன. ஹமாஸ் தீவிரவாதிகள் மக்களோடு மக்களாகக் கலந்திருப்பதால் இந்தத் தாக்குதல்களில் பலி எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவிக்கிறது. ஆனால் காஸாவிலிருந்து பாலஸ்தீன மக்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்றுவதற்காகவே அப்பாவி மக்கள் கொல்லப்படுவதாக பாலஸ்தீனத் தரப்பு கூறுகிறது.














Add Comment