இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்றுமதித் தடைகளை நீக்கியதால் அரிசி ஏற்றுமதிப் போர் சூடுபிடித்துள்ளது. இந்த இரு நாடுகளும் விலை உச்சவரம்புகளை அகற்றி அரிசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கு நகர்வுகளை மேற்கொண்டதை அடுத்து கடந்த வாரம் திங்கள் கிழமை பல்வேறு வகையான அரிசிகளுக்கான உலகளாவிய விலைகள் வீழ்ச்சியடைந்தன. இதனால் விலை நிர்ணயப் போர் உருவாகும் என ஏற்றுமதியாளர்கள் அஞ்சுகிறார்கள்.
எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக உற்பத்தி குறைவாக இருக்கும் என்ற கணிப்பால் கவலையடைந்த இந்தியா கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாசுமதி அல்லாத அரிசி வகைகளை ஏற்றுமதி செய்யத் தடை விதித்தது. பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. அதனைத் தொடர்ந்து உலகளவில் அரிசித் தட்டுப்பாடு ஏற்பட்டது. அரிசி விலை பதினைந்து மடங்கு உயர்ந்தது. உள்நாட்டில் விலையைக் குறைப்பது முதன்மை நோக்கம். ஆனால் நிலவரம் அதற்கு நேர்மாறாக அமைந்தது.
இந்த ஆண்டில் அதிகமான நெல் விளைச்சலால் அனைத்து மாநிலக் கிடங்குகளிலும் நெல் இருப்பு அதிகமாக உள்ளன. அதனால் ஒரு வருடத்திற்கு முன்பு பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதியைத் தடை செய்து பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு நீக்கியுள்ளது.
இந்தியா தடையை நீக்குவதற்கு ஒரு நாள் முன்பு பாகிஸ்தான் கடந்த ஆண்டு அனைத்து அரிசி வகைகளுக்கும் நிர்ணயித்த ஏற்றுமதி குறைந்தபட்ச விலையைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. ஏற்றுமதி குறைந்தபட்ச விலை என்பது அரசு ஒரு பொருளுக்கு நிர்ணயித்த விலையைவிடக் குறைந்த விலையில் ஏற்றுமதியாளர்கள் அந்தப் பொருளை ஏற்றுமதி செய்யக் கூடாது. பாசுமதி அரிசிக்கு ஒரு டன்னுக்கு $1,300 எனவும் பாசுமதி அல்லாத அரிசிகளுக்கு $550 எனவும் பாகிஸ்தான் நிர்ணயித்தது. கடந்த மாதத்தில் பாசுமதி அரிசிக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை இந்தியா நீக்கியது பாகிஸ்தான் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Add Comment