“ரஷ்யாவின் அழகான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரிலிருக்கிறேன். இங்கு மனதை வருடும் தென்றல் வீசுகிறது, அதிக வெப்பமோ, குளிரோ இல்லை. என்னைச் சுற்றி மக்கள் இயல்பாக நடமாடுவதை நீங்களே பார்க்கிறீர்கள். போர் நடப்பதெல்லாம் உக்ரைன் எல்லையில் மட்டுமே. ஊருக்குள் ஒன்றும் பிரச்சனை இல்லை. இங்கிருந்து பின்லாந்து 160கிமீதான். எஸ்டோனியா 130கிமீ, நீங்களே கூகிள் மேப்பில் சரிபாருங்கள். இங்கு வந்தபின் எங்கெங்கு சுற்றலாம் என்று திட்டமிட்டு வையுங்கள்.”
அழகான வேலைப்பாடுகளுடைய பீட்டர்ஹோவ் அரண்மனையின் முகப்பைச் சுற்றிக் காட்டியபடியே, இவற்றை வீடியோப் பதிவிடுகிறார், ஃபைசல் கான். மும்பையின் தாதர் நகரைச் சேர்ந்தவர். சில வருடங்கள் விற்பனையாளராகத் துபாயில் பணிபுரிந்துவிட்டு, எட்டு வருடங்களாக பாபா வ்லோக்ஸ் எனும் யூடியூப் நிறுவனத்தை நடத்துபவர். மூன்று லட்சம் பேர் பின்தொடரும் பிரபல சேனல் இது. சென்ற ஜூலை மாதம் முதல், இந்திய இளைஞர்களுக்கு ரஷ்யாவில் வேலை வாங்கித்தரும் உன்னதப் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
Add Comment