இன்டர்நெட் ஆர்கைவ் இணையதளம் மீண்டும் ஹேக் செய்யப்பட்டது. உலகம் முழுக்க ஆய்வறிஞர்கள், மாணவர்கள், வரலாற்று ஆர்வலர்களை இது வருத்தத்தில் ஆழ்த்தியது. தவணை முறையில் தளம் மீண்டு வருகிறது. திரும்ப வந்துவிடுவோம் என்பதையே பல நாள்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இணையமும் அதன் தொழில் நுட்பமும் மாறிக் கொண்டு வருகிறது. இன்று இருக்கும் ஓர் இணையதளம் இரண்டு வருடங்களுக்கு முன் எப்படி இருந்திருக்கும் அல்லது இருபது வருடங்களுக்கு முன் எப்படி இருந்து இருக்கும் என்று தெரிந்து கொள்வது கடினம். ஆனால் இன்டர்நெட் ஆர்கைவ் மூலம் அதனை நாம் கண்டறிய முடியும். மிக முக்கியமான இணையதளங்களை ஆவணமாகச் சேகரித்து வைத்துள்ளது.
மே மாதமே இத்தளம் ஹேக் செய்யப்பட்டது. அப்போது சின்னப் பிள்ளைகள் விளையாட்டுத் தனமாகச் செய்தது என்றார்கள். DDoS என்பது சாதாரண முறையில் செய்யப்படும் ஹேக்கிங். பொய்யான டிராபிக்கை உருவாக்கி பயனர்களை உள்ளே அனுமதிக்காமல் சர்வரை ஹேக் செய்யும் வழி. பயன்படுத்த முடியாது என்பதைத் தவிர ஒன்றும் பெரிய சிக்கலில்லை. இணையதளத்துக்கு அதனால் பெரிய பாதிப்பு இருக்காது. ஆர்கைவ் குழு துரிதமாக இதைச் சரி செய்தது. மக்களும் உபயோகித்து வந்தனர்.
அக்டோபர் மாதம் ஹேக் செய்தவர்கள் ஒரு படி முன்னேறிச் சென்று கைவரிசை காட்டி உள்ளார்கள். லாகின் செய்து உள்ளே வந்த பயனர்களுக்கு “நீங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளீர்கள். உங்களுடைய பயனர் பெயரும் கடவுச்சொல்லும் எங்கள் வசம் உள்ளன” என்ற குறுஞ்செய்தியைக் கட்டம் போட்டுக் காட்டினார்கள்.
Add Comment