பண்டைக்கால யுத்தங்களில் முதல் தாக்குதலாக அம்புமழை பொழிவதைத் திரைக்காட்சிகளில் கண்டிருப்போம். நவீன யுகத்தில் அந்த அம்புகளின் இடத்தை டிரோன்கள் நிரப்புகின்றன. இனி நிகழப்போகும் யுத்தங்களில் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளின் முதல் ஆயுதமாக இருக்கப்போவதும் டிரோன்கள்தான் எனத் தெரிகிறது. சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் போரிலும், இரான்-இஸ்ரேல் போரிலும் டிரோன்கள் பெரும் பங்கு வகித்திருந்தன.
இதில் இரானின் டிரோன் தொழில்நுட்பம் பெருமளவில் வளர்ந்திருப்பதைக் காணமுடிகிறது. சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம்170 டிரோன்களைக் கொண்டு இரான் இஸ்ரேலைத் தாக்கியது உலக நாடுகளின் கவனத்தைப் பெருமளவில் ஈர்த்திருந்தது. அதைத் தொடர்ந்து, கடந்த மாதம் நிகழ்ந்த இரான்-இஸ்ரேல் போரில் டிரோன்களையும் ஏவுகணைகளையும் மையப்படுத்திய இரானின் போர் உத்தி, வான்வழித் தாக்குதலுக்குப் புதிய வடிவம் கொடுத்துள்ளது எனலாம்.
ஒரு காலத்தில் உலகத்தின் பெரும்பகுதி நிலத்தைக் கட்டியாண்ட நாடாக இருந்தது இரான். அப்போது அந்நாடு பெர்ஷியா என்று அழைக்கப்பட்டது. காலமாற்றத்துக்குப் பெர்ஷியாவும் விதிவிலக்காக இருக்கவில்லை. அதன் ஆதிக்கம் குறைந்துகொண்டே வந்து, பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ரஷ்ய, பிரித்தானிய ஆக்கிரமிப்புகளுக்குள்ளானது.














Add Comment