கடந்த ஜூன் 23ஆம் தேதி உலகத்தின் கவனத்தை ஈர்த்த ஒரு நிகழ்ச்சி நடந்தேறியது. எத்தியோப்பியா மற்றும் எரித்ரியாவின் மூடப்பட்ட சர்வதேச எல்லையின் ஒரு பகுதி, ஐந்தாண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாகத் திறக்கப்பட்டது. மூடிய கதவுகளின் இருமருங்கிலும் தவித்துக் கொண்டிருந்த உறவுகளின் நெகிழ்ச்சியான சங்கமமே அந்நிகழ்வு. உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என இருநாட்டு எல்லையை ஒட்டிய கிராமங்களில் வாழும் மக்கள் சாலம்பெஸ்ஸா என்னும் எத்தியோப்பிய நகரத்தில் சந்தித்து மகிழ்ந்தனர்.
எத்தியோப்பியாவும் எரித்ரியாவும் கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதியில் உள்ள நாடுகள். இவை பண்டைய அக்சும் பேரரசின் பகுதிகளாக இருந்தன. ஒரே கலாசாரம், பாரம்பரியம், மதம், மொழி என இவ்விரு நாடுகளின் வரலாறு ஒரே வேரிலிருந்து தோன்றி வளர்ந்தவையே. கிபி ஒன்றாம் நூற்றாண்டு முதல் ஏழாம் நூற்றாண்டு வரை ரோமப் பேரரசுகள் வர்த்தகம் செய்த முக்கியத் தளங்களாக இந்நாடுகள் இருந்தன.
1890இல் எரித்ரியாவை தனது குடியேற்ற நாடாக அறிவித்தது இத்தாலி. ஆனால் எத்தியோப்பியா தனிநாடாகவே இருந்தது. 1941இல் இத்தாலியிடமிருந்து எரித்ரியாவை இங்கிலாந்து கைப்பற்றி ஆட்சி செய்தது. பின்னர் 1952இல் எரித்ரியா கூட்டாட்சி முறைப்படி எத்தியோப்பியாவுடன் இணைக்கப்பட்டது. ஆனால் 1962இல் எத்தியோப்பியா எரித்ரியாவைத் தனிநாட்டு உரிமையின்றித் தனது ஒரு மாநிலமாக மாற்றியது. இதுவே இரு நாடுகளிடையே ஏற்பட்ட பூசலின் தொடக்கப் புள்ளி.















Add Comment