சனிக்கிழமை என்பது அநேகமான உலக நாடுகளில் விடுமுறை தினம். அதுவும் யூதர்களுக்குச் சனிக்கிழமை என்பது முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை போன்றொரு புனித நாள். வர்த்தக நிலையங்கள், அரச அலுவலகங்கள் எல்லாவற்றையும் இழுத்துச் சாத்திவிட்டு ஓய்வில் இருப்பார்கள் இஸ்ரேலியர்கள். இப்பேர்பட்ட சனிக்கிழமை ஒன்று, யூதர்களின் மகத்துவமான மத அனுஷ்டான தினமாகவும் அமைந்தால் எப்படி இருக்கும்.? டபுள் போனஸ் கிடைத்த ஐ.டி. ஊழியர்கள் போலக் கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள். 2023ம் ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதியும் அப்படியொரு நாள் தான். ‘Simchat Torah’ தினம்.. அதாவது யூதர்களின் நாட்காட்டியின்படி கடந்து போகும் ஆண்டின் புனித தோரா வேத வாசிப்பின் கடைசி நாளும், புது ஆண்டுக்கான தோரா வாசிப்பின் ஆரம்ப நாளும் இதுதான். சரியாய்க் காலை ஆறு முப்பது. காஸாவில் இருந்து தயாராகியது ஹமாஸ். ’Operation Al- Aqsa Flood Storm’ என்று பெயர் சூட்டிக் கச்சேரியைக் கோலாகலமாய் ஆரம்பித்து வைத்தது.
இஸ்ரேல் மட்டுமல்ல, இந்த அண்டசராசரமே அப்படியொரு பிரம்மாண்டத் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. ஐயாயிரம் ராக்கட்டுகள் இஸ்ரேலை நோக்கிப் பாய்ந்தன. ஹமாஸ் ஏவும் ராக்கட்டுக்களை வழியில் மறித்து செல்லாக்காசாக்கும் இஸ்ரேலின் நவீன தொழில்நுட்பமான ‘Iron Dome’ நிலைகுலைந்து போனது. நூறு இருநூறு என்றால் சமாளித்துவிடலாம். ஸிம்பாப்வே பணவீக்கம் மாதிரி இத்தனை பெரிய தொகையை எப்படிச் சமாளிப்பது.? அதனால் முடியவில்லை. இஸ்ரேல் திணறி முழு தேசமும் சைரன் ஒலிகளால் அலறத் தொடங்கிய போது ஹமாஸ் போராளிகள் காஸா – தெற்கு இஸ்ரேல் எல்லைகளுக்குள் ஊடுருவினார்கள். கண்மண் தெரியாத தாக்குதல்கள். பலமான இரும்புக் கம்பிகளும் எல்லைச் சுவர்களும் செங்கல் செங்கல்லாகச் சிதற, ரைட் சகோதரர்கள் பறக்கத் தொடங்கிய ஆரம்ப நாள்கள் போல பாராசூட்டில் கவ்விக் கொண்டு ஒரு கூட்டம் இஸ்ரேலுக்குள் நுழைந்து குண்டு மழை பொழிந்தது. இவர்களுக்குப் பக்கவாத்தியமாய் இன்னொரு குழு கடல் வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்து அகப்பட்டவர்களை எல்லாம் சுடத் தொடங்கியது.
Impressive!