ஒருவரை வேவு பார்ப்பதென்று முடிவெடுத்து விட்டால் மேலோட்டமாகச் செய்ய முடியாது. குறித்த நபரின் நடை, உடை, பாவனை, வாழ்க்கை வட்டம், இடுப்பின் சுற்றளவு இத்யாதிகள் அனைத்தையுமே பக்காவாக உள்வாங்க வேண்டும். பருவ வயதுக் காதலனைப் போலப் பின்னாலேயே இருந்து நோட்டம்விட வேண்டும். இப்படித்தான் 2012-ஆம் ஆண்டில், லண்டன் மாநகரில் ஓர் இளைஞன் தான் உளவு பார்க்கப்படுவதை உணர்கிறான். எங்கேயாவது உதவி கேட்கவென்று வெளியே இறங்கினால் கூட ஓடிவந்து பிடித்து விடுவார்கள். தப்புவதற்கு அவனுக்கு ஒரேயொரு வழிதான் தெரிந்தது. தனது மொத்தத் தோற்றத்தையும் மாற்றுகிறான். கண்களுக்கு நிற வில்லைகள், கேசத்துக்குச் சாயம், உணவு டெலிவரி பையன் போன்ற ஆடைகள் சகிதம் கிளம்புகிறான். சப்பாத்துக்குள் சிறு கற்களைப் போட்டுக் கொண்டதால் நடை கூட வேறு மாதிரிதான் இருந்தது. ஆனாலும் மோப்ப சக்தி கொண்ட அந்த அதிகாரிகள் அவனை நெருங்கி வந்து விட்டார்கள். வேறு வழியே தெரியவில்லை. வேகமாகச் சென்று ஈக்குவடோர் நாட்டின் தூதரகத்து வாசலின் முன் நிற்கிறான். இரு கைகளையும் மேலே தூக்குகிறான்.
“அரசியல் புகலிடம் கொடுங்கள்” என்பதே அதன் அர்த்தம்.
ஜூலியன் அசான்கே (அசான்ஞ்) அன்று முதல் தனது வாழ்வின் ஏழு முழு வருடங்களை லண்டன் நகரத்து ஈக்குவடோர் தூதுவராலயத்தில் கழித்தார். அந்தக் கட்டிடத்திற்கு வெளியே அவரது கால்கள் பட்டால் லண்டன் பொலீஸ் அவரை லபக்கிக் கொண்டு போய் விடும். அப்படியே பொதி செய்து அமெரிக்காவுக்கு அனுப்பிவிடும். அதன் பின் அவரை உலகம் மறந்து மூச்சுவிடும். தூதரகத்து மண், அவருக்கிருந்த ஒரே பாதுகாப்பு சக்தி..! அந்த அலுவலகப் பால்கனிக்கு வந்து ஊடகவியளார்களைச் சந்தித்த போதிலும் சரி, உள்ளே இருந்து தனது ‘விக்கிலீக்ஸ் இணைய தளத்தை நிர்வகித்த போதிலும் சரி…. அமெரிக்காவின் கண் அவர் மீது ஆழப்பதிந்திருந்தது.
ஆஸ்திரேலியாவில் பிறந்து, ஹாக்கராக வளர்ந்தார் அசான்ஞ். தொடக் கூடாத இடங்களில் கைவைப்பதில் அவருக்கு அலாதி இன்பம் இருந்தது. உலகின் பல கொடிய ரகசியப் பெட்டகங்களைத் தட்டித் திறந்து, தான் பார்த்தவற்றை உலகமே பார்க்கச் செய்த அசாத்திய தைரியம் கொண்ட ஊடகவியலாளர் அவர். 2006-ஆம் ஆண்டில் ‘விக்கிலீக்ஸ்’ தளத்தை ஆரம்பித்தார். பல ஊழல் கடிதங்கள் தளத்தின் வழியே இணையத்தை அடைந்தன. அதன் சிறப்பம்சம், உலகெங்கிலும் இருந்து, யார் வேண்டுமாக இருந்தாலும் அதற்குள் நுழைந்து ‘கருப்புக்’ கோப்புக்களைப் பதிவேற்ற முடியும். பதிவேற்றுபவரின் எந்தவித விவரமும் தேவையே இல்லை. ‘அனானிமஸ்’ போர்வைக்குள் இருந்து அதியுச்சப் பாதுகாப்பு விவகாரங்களை அம்பலமாக்க இந்தத் தளம் பெரும் உதவியாக இருந்தது. அசான்ஞ்சைச் சுற்றி, கூட்டம் சேரத் தொடங்கியது.
Add Comment