சென்னை ராயபுரம் அருகில் உள்ள கடற்கரைப் பகுதி காசிமேடு. தமிழ்நாட்டின் மீன் சந்தைகளுள் புகழ்பெற்ற சந்தை இது. இங்கிருந்து கேரளா, பெங்களூரு மட்டுமல்ல… வெளிநாடுகளுக்கும் மீன்கள் ஏற்றுமதியாகின்றன.
1856-இல் முதல் இருப்புப்பாதை அமைக்கப்பட்டது. முதல் ரயில் நிலையத்தை ராயபுரத்தில் திறந்தனர். வியாபார நடவடிக்கைக்காகப் பயன்படுத்தப்பட்டதால் கூட்ட நெரிசல் அதிகமானது. (ஆனால் துறைமுகம் 1975-ல் எம்.ஜி.ஆர். காலத்தில்தான் கட்டப்பட்டது.) எனவே இரண்டாவதாக ஒரு ரயில் நிலையத்தை உருவாக்கும் தேவை இருந்தது. இப்படியாக ரயில்வே துறை உருவான காலத்திலேயே வரலாற்றை மாற்றி எழுதி சென்ட்ரல் உருவாகக் காரணமானது இந்த மீன் சந்தை.
மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் என முத்தரப்பும் நெரியும் சந்தை. கூட்டத்திற்கு உடலை கொடுத்து இடி வாங்குவது ஒருபுறம். கயமுயா என்ற இரைச்சல் மறுபுறம். நானும் நன்றாக வேலை செய்வேன் என்று மூக்கு முந்தும். வாடையை அள்ளிக் கொண்டு வந்து கொட்டும். காலணியைத் தாண்டிவந்து பாதத்தை நனைக்கும் நசநசப்பு. ஆக, ஏக நேரத்தில் ஐம்புலன்களும் சுறுசுறுப்படையும். விழிப்புணர்வோடு சந்தைக்குள் சுற்றிவரலாம்.
Add Comment