உயிரியல் தொழில்நுட்பம் கடந்து வந்துள்ள பாதை மிக நீண்டது. அது செல்ல வேண்டிய தூரமும் இன்னும் நிறைய உள்ளது. சொல்லப்போனால், கடந்து வந்த பாதையை விட மிகச் சுவாரசியமாக இருக்கப் போகின்றது இனி கடக்க இருக்கும் பாதை. இத்தொடரின் இறுதி அத்தியாயமான இதில், உயிரியல் தொழில்நுட்பத்தின் மூலம் நாம் எதிர்காலத்தில் என்ன பலன்களை எதிர்பார்க்கலாம் என்பதைப் பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம்.
உயிரியல் தொழில்நுட்பம் 2.0
உயிரியல் தொழில்நுட்பத்தில் பல்வேறு அதிசயங்கள் நிகழ்த்தப்பட்டிருந்தாலும் அவற்றின் அடிப்படையாகக் கீழ்க்காணும் நான்கு நிகழ்வுகளைக் கூறலாம். முதலாவது, மரபணுவின் கட்டமைப்பினைக் கண்டறிந்தது. இரண்டாவது, மிகக் குறைந்த செலவில் அந்த மரபணுக்களில் உள்ள பேஸ் எனப்படும் வேதியியல் கூறுகளின் வரிசையினை வரிசைப்படுத்தும் தொழில்நுட்பத்தினைக் கண்டறிந்தது. மூன்றாவது, அம்மரபணுக்களைச் செயற்கையாக உற்பத்தி செய்ய முடிந்தது. நான்காவதாக, மரபணுக்களில் உள்ள குறைகளை க்ரிஸ்பர் போன்ற தொழில்நுட்பங்களின் உதவியுடன் மாற்றி அமைக்க முடிவது. இந்த நான்கு நிகழ்வுகளின் மூலமாக உயிரியல் தொழில்நுட்பம் மருத்துவத் துறை மட்டுமன்றி விவசாயம், தோட்டக்கலை, நாட்டின் பாதுகாப்பு, புவி வெப்பமயமாதலுக்கு எதிரான போர், உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி எனப் பல துறைகளிலும் மிகப் பிரமாண்டமான மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. இனியும் ஏற்படுத்தப் போகிறது- முன்பைவிட பிரமாண்டமாக.
Add Comment