குரோமோசோம் எனும் பிரபஞ்ச அதிசயம்
இயற்கை விநோதமானது. ஒருபுறம் அதன் பிரம்மாண்டம் நம்மைப் பிரமிக்க வைக்கும். மறுபுறம் அதன் நுணுக்கமோ நம்மை ஆச்சரியத்தில் தள்ளும். பிரபஞ்சத்தினை எடுத்துக் கொள்வோம். நமது பூமியும் அதனைப் போன்ற கோள்களும் சூரியனைச் சுற்றி வருவதையும், சூரியனும் மற்ற நட்சத்திரங்களும் கேலக்ஸியின் அங்கமாக வேறு ஏதோ ஒன்றினைச் சுற்றி வருவதையும் அறிவோம். இதுபோலப் பல ட்ரில்லியன் கணக்கான கேலக்ஸிகள் இந்தப் பிரபஞ்சத்தில் இருப்பதையும் நாம் அறிவோம். இந்தப் பிரபஞ்சத்தின் எல்லை என்ன என்பது நமக்கு இதுவரை தெரியாது. பிரமாண்டத்திற்குப் பிரபஞ்சம் ஓர் உதாரணம் என்றால் அதற்கு நேர் எதிரான கண்ணுக்குத் தெரியாத அணுக்களின் உலகம் ஆச்சரியத்தின் மறு எல்லை.
மேற்கூறியவற்றினைப் போலவே மனித செல்களுக்குள்ளும் ஆச்சரியங்கள் பல புதைந்துள்ளன. நமது உடலில் பல கோடிக்கணக்கான செல்கள் உள்ளன. கிட்டத்தட்ட 50 ட்ரில்லியன் செல்கள். ஒவ்வொரு செல்களிலும் சுமார் 2 மீட்டர் நீளமுள்ள டிஎன்ஏ-க்கள் உள்ளன. அதாவது நமது உடலில் உள்ள மொத்த டிஎன்ஏ-க்களின் நீளம் சுமார் 100 ட்ரில்லியன் மீட்டர். புரியும்படி சொல்ல வேண்டுமானால் இந்தத் தூரத்தினைக் கடக்கப் பூமியிலிருந்து சூரியனுக்கு 300 முறை சென்றுவர வேண்டும். அல்லது பூமியைச் சுமார் 25 இலட்சம் முறை சுற்றிவர வேண்டும்.
Add Comment