“ரஷ்யா ரஷ்யர்களுக்கே!” மாஸ்கோ மெட்ரோ ரயில் நிலையத்தில் கேட்கின்றன இந்த கோஷங்கள். சைபீரிய யாகுட் இனத்தைச் சேர்ந்தப் பெண்மணி ஒருவரைத் தொல்லை செய்து, கோஷமெழுப்புகிறது ஒரு ரஷ்யக் கும்பல். அங்கிருக்கும் யாருக்கும் இதுபற்றிக் கவலையில்லை. அவரவர் வேலையைப் பார்த்துச் சென்றனர்.
கடந்த மாதம் மாஸ்கோவில் நடந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்குக் காரணமான, நான்கு தஜிகிஸ்தான் இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். இன்றுவரை நீதிமன்ற விசாரணைக்கு சக்கர நாற்காலிகளிலாவது கொண்டு வரப்படுகின்றனர். நாற்பது பேரைக் காவலில் வைத்து விசாரித்தனர். சட்டத்திற்கு எதிராகக் குடி பெயர்ந்துவிட்டார்கள் என ஏறக்குறைய நானூறு பேரை ரஷ்யாவிலிருந்து வெளியேற்றினார்கள்.
மத்திய ஆசிய இஸ்தான் நாடுகளான தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தானிலிருந்து நாலரை மில்லியன் மக்கள், ரஷ்யாவில் வேலை செய்கிறார்கள். பெரும்பாலும் குறைந்த சம்பளத்திற்குக் கூலி வேலைதான் செய்கிறார்கள். என்ன செய்வது, இதுவும் கிடைக்காததால் தான் ரஷ்யாவிற்கு இடம்பெயர்ந்து வந்துள்ளார்கள். இவர்கள் சம்பளத்தில் அனுப்பும் பணம், அவர்கள் குடும்பத்தின் பசி தீர்க்கிறது. அவர்கள் நாட்டிலிருந்து அமெரிக்கா வெகு தூரம். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் சீனாவின் கடுமையான விசா சட்டங்கள் இவர்களை உள்ளே அனுமதிப்பதில்லை. வேறு வழியின்றி ரஷ்யாவிற்கு வருகிறார்கள். பக்கமாகவும் இருக்கிறது, விசாவும் தேவையில்லை. உயிர்வாழப் போதுமான சம்பளமும் வேலையும் நிச்சயம் கிடைக்கும்.
Add Comment