சிறைச்சாலைகளின் அடிப்படை நோக்கம் குற்றம் செய்பவர்களைச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்துவது. இது குற்றவாளிக்கான தண்டனை என்பதோடு, அவர்கள் திருந்துவதற்கான ஒரு சந்தர்ப்பம். தனிமையில் சிந்திப்பதன் மூலம் தன் தவறுகளை உணரலாம், இனி திருந்தி வாழும் முடிவை எடுப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
ஆனால் இதற்கு நேர்மாறாக, குற்றவாளிகளை உற்பத்தி செய்யும் இடமாகச் சிறைச்சாலைகள் மாறினால் என்னவாகும்? குற்றவாளிகள் மட்டுமில்லாமல், கொடூரத் தீவிரவாத, கடத்தல் இயக்கங்கள் அங்கு தோன்றினால் என்ன செய்வது? இப்படியான துரதிர்ஷ்ட நிகழ்வுகள் லத்தீன் அமெரிக்க நாடுகளில் தொடர்ச்சியாக நடந்திருக்கின்றன. அதைவிடத் துரதிர்ஷ்டமாக, அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களே அதற்கு மறைமுகக் காரணமாகவும் இருக்கின்றன.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் வன்முறைக் கும்பல்களின் குற்றச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசுகள் திணறுகின்றன.
1970இல் பிரேசிலின் இல்ஹா சிறைச்சாலை. அதற்கு ஆறு வருடங்களுக்கு முன்பு அந்நாட்டில் ராணுவ ஆட்சி தொடங்கியிருந்தது. அதன் எதிர்ப்பாளர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். ஆட்சியை விமர்சிக்கும் எவராக இருந்தாலும் உடனுக்குடன் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுடன் பிற குற்றங்களைச் செய்த குற்றவாளிகளும் சிறையில் இருந்தனர். கைதிகள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்கள், குறுகிய அறைகள், போதிய வசதிகள் இல்லாமை, சித்ரவதை என மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்தன. பல கைதிகள் மரணமடையும் அளவுக்கான நிகழ்வுகள் அரங்கேறின.















Add Comment