இரண்டு, மூன்றெழுத்து மத்தியப் புலனாய்வுத் துறைகள் முட்டிக்கொண்டதில் இரண்டு அதிகாரிகள் பலிகடாக்களாகி, அதில் ஒரு துறையின் தலைவராக இருந்தவர் செய்யாத தவறுக்காகச் சிறையில் 43 நாட்களைக் கழிக்க நேர்ந்து, பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் படாதபாடுபட்டதுதான் இந்தக் கதை. ஒரு துறை இன்னொன்றின் மீது பாய்ந்து அனைத்து ஊடகங்களிலும் நாற அடித்து, பின் அந்த வழக்கே ஜோடிக்கப்பட்டது என்று நீதிமன்றங்களில் நாறிய கதை இன்னும் இணையத்தில் கிடைக்கிறது. ஏற்கெனவே இருக்கிற கதை ஏன் எழுதப்படவேண்டும் என்கிற கேள்வி எழுவது நியாயம்தான். எல்லோருக்கும் தெரியக் கிடப்பவையெல்லாம் எல்லோராலும் தெரிந்துகொள்ளப்படுவதில்லை என்பதுபோக, இதன் மூலக்கதை எங்கேயும் யாராலும் – பாதிக்கப்பட்டவரால் கூடச் சொல்லப்படவில்லை என்பதும் இந்தக் கதையை எழுதப்படவேண்டியதாக ஆக்குகிறது.
I
நரஹரி அலுவலகச் சகாக்களுடன் காரில் போய்க்கொண்டிருக்கையில் ஆந்திர நெடுஞ்சாலையில் கைகூப்பியபடி பிரம்மாண்டமாக நீல வண்ணத்தில் நின்றுகொண்டிருந்த அனுமார் தாண்டிப்போனார்.
‘பழைய ADG கேஸ் எப்பதாங்க முடியும்’ என்றவன், வாக்கியத்தை முடித்தபின் ‘பாவம்’ என்று சேர்த்துக்கொண்டான். வண்டியில் இருந்த எவரும் ஒன்றும் பேசவில்லை. அநேகமாக அவனைத் தவிர அவர்கள் எல்லோருமே அவரை நேரடியாகப் பார்த்துப் பழகியவர்கள்.
‘சர்வீஸ்ல இருந்திருந்தா இப்ப ரிடையராகியிருந்திருப்பாரு இல்லையா’ என்று சொன்னான். அவனுக்கு மிக நன்றாகத் தெரியும் அவர் ADGயாக இருந்திருந்தால் தன்னைப்போன்ற எந்தப் பின்னணியும் இல்லாத எவனும் தவறிப்போய்க்கூட அங்கு வந்திருக்கமுடியாது என்று. இருந்தாலும் அவருடைய அரசியல் சாய்வு, அடிக்கடி நாளிதழ்களில் முகம் பார்த்துக்கொள்கிற விளம்பர மோகம் என எல்லாவற்றையும் தாண்டி அவரைப் பற்றிக் கேள்விப்பட்டவையெல்லாம் இப்படி ஒரு ஆளா என்கிற பிரமிப்பைத்தான் அவர் மீது ஏற்படுத்தியிருந்தன.
Add Comment