உலகெங்கும் ஜென் ஸீ தலைமுறையினர் முன்னெடுக்கும் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில மாதங்களில் பல நாடுகளில் இந்தப் போராட்டங்களால் ஆட்சி மாற்றத்தை உலகம் பார்த்துள்ளது. ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரிலும் ஜென் ஸீ போராட்டத்தின் விளைவாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
செப்டம்பர் 25 முதல் ‘ஜென் ஸீ மடகாஸ்கர்’ என்ற பெயரில் இளைஞர் குழுக்கள் அரசுக்கு எதிராகப் போராடி வந்தனர். பல வருடங்களாகத் தொடரும் தண்ணீர், மின்சாரப் பற்றாக்குறைகளை எதிர்த்துதான் முதலில் போராட்டம் தொடங்கியது. அது அப்படியே நீண்டு ஊழல் எதிர்ப்புப் போராட்டமாகவும் உருவெடுத்தது. இந்தப் போராட்டங்களில் அனைத்திலும் மக்களின் நல்வாழ்வுக்குரிய அடிப்படைக் கட்டமைப்பு, கல்வி வசதிகள், துடிப்பான மக்களாட்சி போன்றவை வலியுறுத்தப்பட்டன. போராட்டக்காரர்கள் அதிபரின் பதவி விலகலையும் கோரினார்கள். அவர் பதவி விலக மறுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 22 உயிர்கள் பலியாகின. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். போராட்டம் இன்னும் தீவிரம் அடைந்தது. ராணுவத்தின் ஆதரவும் ஜென் ஸீயினர் பக்கம் திரும்பத் தொடங்கியது.
நிலைமை தன் கைமீறிப் போவதை உணர்ந்த அதிபர் ஆன்ட்ரி ரஜோலினா (Andry Rajoelina), உயிருக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கூறி நாட்டை விட்டு வெளியேறி ரகசிய இடத்தில் இருக்கிறார். (ஃபிரெஞ்சு ராணுவ ஹெலிகாப்டரில் தப்பிச் சென்றிருக்கிறார், ஆகையால் அவர் ஃபிரெஞ்சு அரசின் பாதுகாப்பில் இருக்கலாம்.) ஆனாலும் பதவி விலக முடியாது என அறிவித்தார்.















Add Comment