மங்கோலிய அதிபர் கடந்த வாரம் இந்தியாவுக்கு வந்திருந்தார். இந்தியா – மங்கோலியாவுக்கு இடையேயான அரசாங்க ரீதியான உறவுகள் தொடங்கி எழுபது ஆண்டுகள் ஆவதைக் கொண்டாடும் வகையில் இந்தப் பயணம் அமைந்திருந்தது. பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே சில முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
உலகின் பல தேசங்கள் (அமெரிக்கா உள்பட) 1987 ஆண்டு வரை மங்கோலியாவைத் தனிநாடாக அங்கீகரிக்கவில்லை. 1955ஆம் ஆண்டு மங்கோலியாவை ஒரு நாடாக அங்கீகரித்த முதல் கம்யூனிஸ்ட் அல்லாத தேசம் இந்தியா.
மங்கோலிய அதிபர் குரேல்சுக் உக்னாவின் நான்கு நாள்கள் (அக்டோபர் 13-16) இந்தியப் பயணத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு அளித்த விருந்து, பிரதமருடன் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அவை முடிந்ததும் மரக்கன்றுகள் நடுவத்திலிருந்து அக்ஷர்தாம் செல்வதுவரை நிகழ்ச்சிகள் விரிவாகத் திட்டமிடப்பட்டிருந்தன. மங்கோலியாவில் நடைபெற்று வரும் மிகப்பெரிய கச்சா எண்ணெய் திட்டத்துக்கு 1.7 பில்லியன் டாலர் அளவுக்குக் கடன் வரம்பை அளித்து இந்தியா உதவி வருகிறது. 2028ஆம் ஆண்டு இதன் பணிகள் முடிந்து எண்ணெய் உற்பத்தி தொடங்கினால், மங்கோலியாவால் ஆண்டுக்கு ஒன்றரை பில்லியன் டன் அளவுக்குக் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய முடியும். அதன் மூலம் மங்கோலியா தனது எரிபொருள் தேவைகளுக்காக ரஷ்யாவை முழுவதுமாக நம்பியிருக்க வேண்டியதில்லை.















Add Comment