இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் நெடிய வரலாறு கொண்டது. எனவேதான் இந்தியா சுதந்திரம் பெற்றதும், இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்று பல தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. அந்தக் கடந்த காலப் போராட்டம் வருங்கால சந்ததியினருக்கு அரியதொரு வரலாற்று பொக்கிஷமாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதைப் புரிந்துகொண்ட இந்திய அரசாங்கம் அன்றைய துணை ஜனாதிபதி டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. முறையான ஆராய்ச்சியின் மூலமாக அனைத்து தகவல்களையும் திரட்டி, இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை ஆவணப்படுத்தும் பணியை அந்தக் குழு ஏற்றுக் கொண்டு, சீரிய முறையில் செய்து முடிக்க உத்தரவிடப்பட்டது.
ஆனால் குழு அமைக்கப்பட்டு, சில ஆண்டுகள் ஆகியும் அந்தப் பணி தொடங்கப்படவில்லை. எனவே இந்திய அரசு இது குறித்து, புதிய செயல்திட்டம் ஒன்றை வகுத்தது. முதலில் மாநிலங்கள் வாரியாக சுதந்திரப் போராட்ட வரலாற்றை எழுதுவது என்றும் அதன்பிறகு அதனடிப்படையில் அனைத்திந்திய ரீதியில் சுதந்திரப் போராட்ட வரலாற்றை ஆவணப்படுத்துவது என்றும் முடிவு செய்தது. இதன்படி இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அந்தந்த மாநிலங்களின் பங்களிப்பை ஆராய்ச்சி செய்து புத்தகமாகக் கொண்டு வரும்படி மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டன.
Add Comment