உயர்ரக உணவுப் பண்டங்களைப் பரிமாறும் உலகின் உன்னதமான விருந்துபசாரங்களில், கம்பீரமாகக் கோப்பைகளில் மின்னும் பொருள் சிலோன் டீ. ஜப்பானின் வக்யு பீஃப், ஸ்கொட்லாந்தின் வைன், லண்டனின் ஜின் மற்றும் இந்தியாவின் சிக்கன் டிக்காவுடன் சரிசமமாகத் தோள் கொடுத்து இலங்கையின் நாமத்தை சர்வதேசத்தில் மணக்க வைக்கும் மதுரபானம். இலங்கையின் மத்திய மலைச் சாரல்களில் செடிகளாய் வளர்ந்து, பெண்களின் கைகளால் கவனமாகக் கொழுந்து பறிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு உலகச் சந்தைக்கு விடப்படுகிறது
இந்தப் பணியினை முதன்முதலில் ஆரம்பித்து வைத்த இலங்கையர் என்ற பெருமைக்குரிய, ‘டில்மாஹ் டீ’ நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் மெரில் பர்னாண்டோ இவ்வாரம் காலமானார். சிலோன் தேநீரை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பெருமைக்குரியது டில்மாஹ் நிறுவனம். இலங்கை கிரிக்கெட் அணியின் மேலாடையில் பொறிக்கப்பட்டிருக்கும் ‘டில்மாஹ்’ என்ற சொல்லுக்கு உரியவர்கள்.
“முப்பத்து நான்கு வருடங்களுக்கு முன்பு ஒருநாள், ஒரு கோப்பை ப்ளாக் டீ அருந்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஆகா.. என்ன ஒரு வாசனை! என்ன ஒரு இனிமை! அந்தத் தேநீரைப் பல நாட்களுக்கு மறக்க முடியவில்லை என்னால். ஆறு வருடங்கள் கழித்து நானும் எனது தந்தையும் இணைந்து இலங்கைத் தீவிலிருந்து அந்தத் தேநீர் ப்ராண்டை இறக்குமதி செய்யத் தொடங்கினோம்”
Add Comment