17. உலகப் புதுமை
மக்கள் அரசாங்கத்திடம் ஒரு கோரிக்கை வைக்கிறார்கள். அரசாங்கம் அதை ஏற்க மறுத்துவிடுகிறது.
அதனால், மக்கள் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள். அரசாங்கம் இப்போதும் அவர்களுடைய கோரிக்கையை ஏற்க மறுத்துப் பிடிவாதம் பிடிக்கிறது, போராட்டத்தில் ஈடுபடுகிறவர்களைப் பிடித்துச் சிறையில் அடைக்கிறது.
ஆனால், மக்களுடைய அந்தக் கோரிக்கை நியாயமானதுதான். அதனால், உலக அளவில் பலரும் இதைப்பற்றிப் பேசத் தொடங்குகிறார்கள், அந்த மக்களுக்கு ஆதரவு கூடுகிறது, அந்த அரசாங்கத்துக்கு நெருக்கடி கூடுகிறது.
இந்தச் சூழ்நிலையில் அரசாங்கம் சற்று இறங்கிவரவேண்டும், ‘நாங்கள் எங்களுடைய மனத்தை மாற்றிக்கொண்டுவிட்டோம். உங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றிவைக்கிறோம்’ என்று சொல்லவேண்டும். ஆனால், அவர்கள் அப்படிச் செய்வார்களா?
எல்லா மக்களும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் தவறு செய்கிறவர்கள்தான். ஆனால், ‘நான் செய்தது தவறு’ என்று ஒப்புக்கொள்கிற துணிச்சல் பெரும்பாலானோருக்கு வருவதில்லை. அப்படியிருக்க, அத்தனைப் பெரிய, ஆற்றல் மிக்க அரசாங்கம் எப்படித் தன்னுடைய தவற்றை ஒப்புக்கொள்ளும்? ‘நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்தான்’ என்று முறுக்கிக்கொண்டுதான் நிற்கும்!
Add Comment