81. பூங்கொத்தும் கற்களும்
இன்றைக்குக் காந்தியின் கோச்ரப் ஆசிரமத்தைப் பார்ப்பதற்கு உலகெங்கிலுமிருந்து மக்கள் வருகிறார்கள், அதைப்பற்றிய சிறிய தகவல்களைக்கூட ஆர்வத்துடன் கேட்டு, பார்த்துத் தெரிந்துகொள்கிறார்கள், எப்பேர்ப்பட்ட மனிதர் வாழ்ந்த இடம் இது என்று வியந்து நிற்கிறார்கள்.
ஆனால், 1915ல் காந்தி இந்தப் பரிசோதனையைத் தொடங்கியபோது, சுற்றியிருந்த கோச்ரப் மக்களில் பலர் அவரைப் புரிந்துகொள்ளவில்லை. ‘அதற்குக் காரணம், எங்களுடைய விநோதமான எளிமைதான்’ என்றார் காந்தி.
அந்தக் காலத்தில் துறவறம் மேற்கொள்கிறவர்கள் காட்டுக்குள் சென்று ஆசிரமம் அமைப்பார்கள். அதனால், வழக்கமான உலக வாழ்க்கையில் ஈடுபடுகிறவர்களும் அவர்களும் அருகருகில் வசிக்கிற, ஒருவரையொருவர் புரிந்துகொள்கிற தேவையே இருக்காது. காந்தியின் ஆசிரமம் ஊருக்கு நடுவில் அமைந்திருந்ததால், அங்குள்ளவர்களுடைய மாறுபட்ட வாழ்க்கை முறை அக்கம்பக்கத்து மக்களுக்குப் புரியவில்லை. இதனால், தேவையில்லாத சண்டைகள், சச்சரவுகள் முளைத்தன.
எடுத்துக்காட்டாக, கோச்ரப் ஆசிரமத்துக்கு அருகில் வசித்த ஒருவர், ஆசிரம உறுப்பினர்களைப் பார்க்கும்போதெல்லாம் திட்டுவார், அடிப்பார், அவர்கள் தங்களுக்கு உரிய இடத்திலிருந்து தண்ணீர் எடுக்க முயன்றால்கூட அவர்களைத் தடுத்து நிறுத்திவிடுவார். ‘இதுபோன்ற சிக்கல்கள் மெல்லச் சரியாகிக்கொண்டிருக்கின்றன. ஆனால், புதிய சூழ்நிலைகள் வரும்போது புதிய சிக்கல்கள் எழுகின்றன. இவை எங்கள் அனைவரையும் இன்னும் தூய்மைப்படுத்தும் என்று நம்புகிறேன்’ என்று கால்லென்பாகுக்கு எழுதினார் காந்தி.
Add Comment