83. கைக்கெட்டிய கைத்தறி
ஜூலை 17 அன்று, கஸ்தூரிபா ஒரு வேட்டியைத் துவைத்துக்கொண்டிருந்தார். அதைப் பார்த்த காந்திக்குக் கோபம் வந்துவிட்டது.
வேட்டியைத் துவைப்பது பெரிய குற்றம் இல்லைதான். ஆனால், சத்தியாக்கிரக ஆசிரமத்தில் எல்லாரும் தங்கள் வேலைகளைத் தாங்களே செய்துகொள்ளவேண்டும் என்று ஒரு விதிமுறை இருந்ததுபோல. கஸ்தூரிபா இன்னொருவருடைய வேட்டியைத் துவைக்கிறார் என்றால், அவர் அந்த விதிமுறையை மீறியவராகிறார்.
அத்துடன், இதைப்பற்றிக் காந்தி விசாரித்தபோது கஸ்தூரிபா பொய்யாக ஏதோ சொல்லிவிட்டார். இதுவும் ஆசிரம விதிமுறைகளை மீறுவதாகும்.
அதனால், காந்தி கஸ்தூரிபாமீது சினத்துடன் பொங்கினார், ‘இனிமேல் நீ மற்றவர்களுடைய துணிகளைத் துவைக்கக்கூடாது. நீ அப்படி ஒரு கைக்குட்டையைத் துவைத்தால்கூட நான் 14 நாட்களுக்கு எதையும் சாப்பிடமாட்டேன்’ என்றார்.
இவ்வளவு பரபரப்பை உண்டாக்கிய அந்த வேட்டி யாருடையது?
அது ‘தேவா’வின் வேட்டி என்று எழுதுகிறார் காந்தி. அப்போது காந்தி, கஸ்தூரிபா-வின் மகன் தேவ்தாஸ் சத்தியாக்கிரக ஆசிரமத்தில்தான் இருந்தார். அநேகமாக அவரைத்தான் காந்தி ‘தேவா’ என்று குறிப்பிட்டிருக்கவேண்டும்.
Add Comment