87. மனமாற்றம்
செப்டம்பர் 26 அன்று, தூதாபாயும் அவருடைய மனைவி தானிபஹனும் மகள் லட்சுமியும் சத்தியாக்கிரக ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.
இதனால், அவர்களுடைய வருகையைப்பற்றி அதுவரை நடந்துகொண்டிருந்த பேச்சுச் சண்டைகளெல்லாம் இப்போது உருவம் பெற்றன. குறிப்பாக, தானிபஹன் மீது கஸ்தூரிபா-வும் ஆசிரமத்திலிருந்த மற்ற சில பெண்களும் நேரடியான வெறுப்பையும் புறக்கணிப்பையும் காண்பித்தார்கள். அதை வெளிப்படையாகச் சொல்லவும் அவர்கள் தயங்கவில்லை.
தூதாபாயோ அவருடைய மனைவியோ சமைத்த உணவை, அல்லது, அவர்கள் தொட்ட உணவைச் சாப்பிடுவதற்குக் கஸ்தூரிபா-வுக்கு விருப்பமில்லை. ‘நான் இனிமேல் பழங்களைமட்டும்தான் சாப்பிடப்போகிறேன்’ என்று அறிவித்துவிட்டார் அவர்.
அடுத்த சில நாட்களில் அவர்கள் இப்படிப் பலவிதங்களில் அவமதிக்கப்பட்டார்கள். இவற்றைக் கண்டும், கேட்டும் வருத்தப்பட்ட காந்தி, ‘இந்தப் புயலை என்னால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை’ என்றார்.
அப்போது சத்தியாக்கிரக ஆசிரமத்துக்குத் தேவையான தண்ணீர் அங்கிருந்த ஒரு கிணற்றிலிருந்து இறைக்கப்பட்டது. அதே கிணற்றை இன்னொருவரும் பயன்படுத்திக்கொண்டிருந்தார். தூதாபாயின் வருகை அவருக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கியது. ஏனெனில், தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவருடன் தங்கிச் சாப்பிடுகிற அனைவரையும் அவர் தாழ்த்தப்பட்டவர்களாகத்தான் நினைத்தார், ‘உங்களுடைய வாளியிலிருந்து சிந்தும் தண்ணீர்த் துளிகள் என்மீது பட்டால் நான் தீட்டுப்பட்டவனாகிவிடுவேன்’ என்று அவர்கள் எல்லாரையும் திட்டினார் அவர்.
Add Comment