90. ஒரே ஆசிரியர்
செப்டம்பர் 20 அன்று காந்தி அகமதாபாதிலிருந்து மும்பைக்கு வந்தார். அவருடைய வருகையின் நோக்கம், சாந்திநிகேதனத்திலிருந்து வந்திருந்த C. F. ஆன்ட்ரூஸ், W. W. பியர்சன் என்ற இரு நண்பர்களைச் சந்தித்துத் தன்னுடைய ஆசிரமத்துக்கு அழைத்துவருவதுதான்.
அதே நாளில் அவர்கள் மூவரும் மும்பையில் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டார்கள், தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு ஒன்றை நேரில் சென்று பார்த்தார்கள், அங்கு வசித்தவர்களிடம் பேசி அவர்களுடைய நிலையைப் புரிந்துகொண்டார்கள்.
மறுநாள் (செப்டம்பர் 21), அவர்கள் மூவரும் அகமதாபாதுக்கு வந்தார்கள். ரயில் நிலையத்தில் ஏராளமானோர் அவர்களை வரவேற்றார்கள்.
ஆனால், ஆன்ட்ரூஸும் பியர்சனும் ஆசிரமத்தில் தங்கவில்லை. சில மகிழ்ச்சியான சந்திப்புகள், உரையாடல்களுக்குப்பிறகு, அன்று இரவே அவர்கள் அகமதாபாதிலிருந்து கிளம்பிவிட்டார்கள்.
ஒரு வாரத்துக்குப்பிறகு, (செப்டம்பர் 29 அன்று) காந்தி மீண்டும் மும்பைக்குப் புறப்பட்டார். மறுநாள், மும்பையில் ‘தென்னாப்பிரிக்கப் போராட்ட நிதி’ அமைப்பின் அறங்காவலர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார் அவர்.
Add Comment