93. கோகலே நினைவகம்
நவம்பர் 30 அன்று, இந்திய ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த சிந்தாமன் சகாராம் தேவ்லெ காந்தியைச் சந்திக்க வந்தார். அவருடைய பயணத்தின் நோக்கம், கோகலே-வுக்கு ஒரு நினைவகம் அமைப்பது, அதற்காக நிதி திரட்டுவது.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகத் தன்னுடைய ஆசிரமத்தை விட்டு நகராத காந்தி, கோகலே-வுக்கான நிதி திரட்டல் என்றதும் ஆர்வத்துடன் கிளம்பிவிட்டார். டிசம்பர் 1 அன்று அகமதாபாதிலிருந்து புறப்பட்ட அவர் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வீரம்காம், வாத்வான், ராஜ்கோட், வாங்கானேர், கோண்டல், ஜெத்பூர், வர்தெஜ், பாவ்நகர், அம்ரேலி, ஹடாலா, பகசரா, லிம்ப்டி, த்ரங்கத்ரா ஆகிய பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் செய்தார், அந்தந்த ஊர் மக்களுடனும் பெரிய மனிதர்களுடனும் உரையாடினார், கோகலே நினைவகத்துக்குத் தாராளமாக நிதியளிக்கும்படி அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
முதலில் இந்தப் பயணத்துக்குத் தேவ்லெ-யோடு காந்திமட்டும்தான் செல்வதாக இருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் கஸ்தூரிபா-வும் அவரோடு வருவதாகச் சொல்லி ஆயத்தமானார். இன்னும் சிலரும் அவர்களோடு சேர்ந்துகொண்டார்கள்.
ராஜ்கோட் செல்லும் வழியில், வீரம்காம் ரயில் நிலையத்தில் சுமார் இருபத்தைந்து பேர் அவர்களை வரவேற்றார்கள். அங்கு ஒரு மணி நேரம் தங்கிய காந்தி மக்களிடையில் உரையாற்றினார், கோகலே நினைவகத்துக்கு நிதி வேண்டினார்.
டிசம்பர் 3 அன்று வாங்கானேர் என்ற நாட்டை வந்தடைந்த காந்தி ஒரு மலையின்மீது அமைந்த அழகிய கட்டடமொன்றில் தங்கினார், ‘இங்கிருந்து பார்க்கும்போது இந்த நாட்டின் அழகை நன்கு ரசிக்கமுடிகிறது’ என்று கால்லென்பாகுக்குக் கடிதம் எழுதினார்.
Add Comment