94. மகிழ்ச்சியும் கவலையும்
டிசம்பர் 7 அன்று, பாவ்நகரைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையில் உரையாற்றினார் காந்தி. சத்தியாக்கிரக ஆசிரமத்தில் மாணவர்களுக்கென்று விதிக்கப்பட்டிருக்கின்ற சில கட்டுப்பாடுகளின் தேவையை விளக்குவதுபோல் இந்த உரை அமைந்தது.
‘மாணவர்களாகிய நீங்கள் உங்களுடைய துணிகளை நீங்களே துவைக்கக் கற்றுக்கொள்ளவேண்டும், சமையல், பாத்திரம் தேய்த்தல் போன்ற தனிப்பட்ட வேலைகளையும் நீங்களே செய்துகொள்ளவேண்டும்’ என்றார் காந்தி, ‘உடல் உழைப்பு இழிவானது என்கிற தவறான எண்ணம் உங்களுக்குள் இருந்தால் அதைத் தூக்கி எறிந்துவிடுங்கள்.’
ஒவ்வொருவருக்கும் தொடக்கக் கல்வி தேவை என்பதை ஒப்புக்கொண்ட காந்தி, ‘ஆனால், எழுதப் படிக்கத் தெரியாத, அதே நேரம் செயல்திறனுடன் பணியாற்றுகிற பலரை நான் அறிவேன். இதற்குக் காரணம், அவர்கள் எதையும் உள்ளுணர்வின்மூலம் புரிந்துகொண்டு செயல்படுவதுதான்’ என்றார். இதன்மூலம், முழுமையான கல்விக்காகக் காத்திருப்பதைவிட, கிடைக்கும் அறிவைப் பயன்படுத்திக்கொண்டு செயலில் இறங்குவது நல்லது என்று மாணவர்களுக்குப் புரியவைத்தார் அவர்.
‘இன்றைய கல்வி சண்டையையும், துரோகத்தையும், சூழ்ச்சியையும்தான் கற்றுத்தருகிறது’ என்றார் காந்தி, ‘அதற்குப் பதிலாக, நாம் உயர்ந்த செயல்களைப்பற்றி நிறையப் படிக்கவேண்டும்!’
Add Comment