டிசம்பர் 20, வெள்ளிக்கிழமை நடந்த தென்கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பான ஆசியான் சந்திப்பில் மியான்மர் நாட்டுக்கான தங்கள் திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என முடிவானது. அதே நாளில் மியான்மர் ஆயுதக் குழுக்களில் ஒன்றான அராக்கன் ஆர்மி, ராகினி மாநிலத்தில் முக்கியமான ராணுவத் தளத்தைக் கைப்பற்றியதாகச் சொன்னது.
தென்கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பான ஏசியான் தலைவர்கள் சந்திப்பு தாய்லாந்தில் நடந்தது. மூன்றாண்டுகளுக்கு முன்பு ஐந்து அம்சத் திட்டம் ஒன்றை மியான்மர் விவகாரத்துக்கு ஏசியான் பரிந்துரைத்திருந்தது. வன்முறை நிறுத்தம், உரையாடல் தொடக்கம், சிறப்புத் தூதர் வருகை உள்ளிட்ட இந்த பரிந்துரைகளை மியான்மர் ராணுவ ஆட்சிக் குழு நிராகரித்திருந்தது. தற்போது இந்த தோல்வியடைந்த ஐந்து அம்சத் திட்டத்தில் மாறுதல் தேவை என்பதில் ஏசியான் நாடுகளில் கருத்தொற்றுமை நிலவுகிறது. ஆனால் அந்த மாறுதல் ராணுவக் குழுவுக்கு அங்கீகாரம் அளிப்பதல்ல எனச் சிங்கப்பூர், மலேசியா நாடுகள் வலியுறுத்துகின்றன.
அடுத்த ஆண்டு ஏசியான் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பு மலேசியாவிடம் வரப்போகிறது. ஜக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் ஆயுதத் தடை விதிப்பை ஆதரிக்க வேண்டும் என்பதே இவர்கள் நிலைப்பாடு. எனவே அதை நோக்கிய ஏசியான் நாடுகள் செல்ல வாய்ப்பிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் மலேசியப் பிரதமர், மியான்மர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏசியான் கூட்டமைப்பின் கடமையைப் புறக்கணிப்பதாகும் எனத் தெரிவித்திருந்தார். மியான்மர் ராணுவ அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை அகற்றிவிட்டுப் பதவிக்கு வந்தது. ஆசியான் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு இருந்த போதும் அவர்கள் வரவில்லை.
Add Comment