இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும் தனித்துச் சிந்திக்க எளிய மக்களுக்குப் பெரிய அவசியம் இல்லை. ஆனால் நாட்டு மக்கள் அத்தனை பேருமே கூர்ந்து கவனிக்க இந்த அறிக்கையில் ஒரு செய்தி உள்ளது. அது,
ஓர் அரசாங்கம் தயாரித்த பட்ஜெட்டாக அல்லாமல், ஒரு கட்சி தயாரித்த பட்ஜெட்டாக இருப்பது.
இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் கடந்த முறை நடந்ததைப் போல அக்கட்சிக்குத் தனிப் பெரும்பான்மை கிடையாது. ஆந்திரத்தின் சந்திரபாபு நாயுடுவும் பிஹாரின் நிதிஷ் குமாரும் பாரதிய ஜனதாவுக்குத் தத்தமது ஆதரவைத் தெரிவித்ததனால்தான் அக்கட்சியால் இம்முறை ஆட்சி அமைக்க முடிந்தது. இது நாடறிந்த விவரம். கட்சிகளின் கூட்டணி என்பது அந்தந்த சந்தர்ப்பத்தில் அவரவர் தேவை மற்றும் விருப்பம் சார்ந்து அமைவது. எனவே, குறை சொல்ல ஒன்றுமில்லை.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவ்விரு மாநிலக் கட்சிகளுக்கும் பாரதிய ஜனதா எதையாவது செய்ய விரும்பினால் அதுவும் நியாயமானதே.
ஆனால், இருபத்தெட்டு மாநிலங்களையும் எட்டு யூனியன் பிரதேசங்களையும் சமமாகக் கருதி, வளர்ச்சித் திட்டங்களையும் அவற்றுக்கான நிதி ஆதாரங்களையும் பகிர்ந்தளித்து நாடு வளம்பெற வழி செய்ய வேண்டிய ஒன்றிய அரசு, மேற்சொன்ன இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் அள்ளி அள்ளி அளித்திருப்பது திகைப்பையல்ல; அதிர்ச்சியையே தருகிறது.
ஆந்திரா மற்றும் பீகாருக்கு பட்ஜெட்டில் சொன்ன அளவு நிதி கிடைக்கும் என்பதற்கு என்ன ஆதாரம். பாஜகவை பொறுத்தவரை பட்ஜெட்ம் தேர்தல் அறிக்கையும் ஒன்று தான்.