பங்களாதேஷில் மாணவர் புரட்சி வெற்றி கண்டு, பிரதமர் ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, நாட்டைவிட்டுத் தப்பித்திருக்கிறார். அவரது இந்தத் தப்பித்தலுக்கு இந்தியா உதவி செய்து, உறுதுணையாக இருந்திருக்கிறது. ஷேக் ஹசீனா மீண்டும் வங்க தேசத்துக்குத் திரும்பி, அரசியலில் ஈடுபட வாய்ப்பில்லை என்று அவரது மகன் கூறியிருக்கும் அதே சமயம், அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை இப்போது ராணுவம் கைப்பற்றியிருக்கிறது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, இடைக்கால அரசு ஒன்று அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்க தேசம், 1971 ஆம் ஆண்டு சுதந்தர நாடாக உருப்பெற்றதன் பின்னணியில் இந்தியாவின் உதவியும் ஒத்துழைப்பும் இருந்தது. சுதந்தர பங்களாதேஷின் தந்தை என்று வருணிக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் உருவச் சிலையைத்தான் இப்போது புரட்சிகர மாணவர்கள் சுத்தியல் கொண்டு உடைத்து வீசினார்கள். மாணவர் சக்தியின் எழுச்சியை எதிர்கொள்ள முடியாமல் தப்பி ஓடிய ஷேக் ஹசீனா, முஜிபுர் ரஹ்மானின் மூத்த மகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
உலகின் பல்வேறு நாடுகளில் சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிராகப் புரட்சி நடந்துகொண்டிருக்கிறது. இந்த வருடத் தொடக்கம் முதலே பெரும்பாலான சர்வாதிகார சக்திகள் ஆட்டம் காணத் தொடங்கின.
ஆனால் வங்க தேசத்தில் நடந்திருப்பது அவற்றைப் போன்ற ஒன்றல்ல. பதினைந்தாண்டு காலத்துக்கும் மேலாக அசைக்க முடியாத சக்தியாக நாட்டைத் தனது இரும்புப் பிடிக்குள் வைத்திருந்த ஷேக் ஹசீனா, இப்போது தப்பித்து ஓடியதைப் புரட்சி செய்த மாணவர்களுக்குக் கிடைத்த வெற்றியாகக் கருத இயலாது. ஏனெனில், பேயிடம் தப்பித்துப் பிசாசிடம் சிக்கிக்கொண்டது போல, ஆட்சி அதிகாரத்தை அங்கே ராணுவம் கையில் எடுத்துக்கொண்டுவிட்டது.
Add Comment