செபி தலைவர் மாதபி புரி புச் மீது குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ளது ஹிண்டர்பர்க் நிறுவனம். கடந்த ஆண்டு அதானி குழுமத்தைக் குறிவைத்து அறிக்கை வெளியிட்டதன் மூலம் இந்தியர்கள் அனைவருக்கும் அறிமுகமான அதே நிறுவனம்தான்.
அதானி குழுமம் ஆஃப்ஷோர் கம்பெனிகளின் மூலம் பங்குகளின் மதிப்பைக் கூட்டிக் காண்பித்து முறைகேட்டில் ஈடுபட்டது என்பது கடந்த வருடம் இவர்கள் வைத்த குற்றச்சாட்டு. லெட்டர்பேடு கம்பெனிகளின் டிஜிட்டல் வடிவம்தான் ஆஃப்ஷோர் நிறுவனங்கள். இல்லாத நிறுவனத்தை வைத்துப் பங்குசந்தையில் தங்கள் மதிப்பைக் கூட்டினர் என்ற தகவல் பரவி அதானி குழுமம் கடும் சரிவைச் சந்தித்தது. பெரிய சேதாரமின்றி மீண்டு வந்துவிட்டது. அச்சமயத்தில் இந்திய பங்குச் சந்தையும் பெரிய அளவில் கீழே சென்று மீண்டது.
இது குறித்து விளக்கம் தெரிவித்த அதானி குழும அறிக்கை, ஹிண்டன்பர்க் போலத் தரவுகளுடன் இல்லை. கட்சி அறிக்கை போல இருந்தது. எல்லாமே பொய், புரட்டு, காழ்ப்புணர்ச்சி, உள் நோக்கம் கொண்டது என்று ஹிண்டன்பர்க் நிறுவனத்தைக் குறைகூறியது.
ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் வேலையே அதுதான். பங்குச் சந்தையில் தவறு செய்யும் பெருநிறுவனங்கள்தான் அவர்கள் குறி. என்ன தவறென்பதைப் புள்ளி விவரங்களுடன் வெளியிட்டு நிறுவனத்தை ஆட்டம் காண வைப்பார்கள். இவர்கள் வெளியிடும் தகவலால் நிறுவனத்தின் சந்தை மதிப்பு விழப்போகிறது என்பது இவர்களுக்குத் தெரியும் என்பதால் அதை வைத்து ஷார்ட்செல்லிங் மூலம் பங்குச்சந்தையில் லாபமடைவார்கள். அவர்கள் வணிகம் எல்லாம் அமெரிக்கச் சந்தையில்தான். சும்மா வாய்க்கு வந்ததைச் சொல்லி வைத்தால் அவதூறு வழக்குகளால் நிறுவனத்தையே மூட வேண்டிவரும். எனவே, ஒவ்வொரு வரியும் ஆதாரத்துடன்தான் இருக்கும்.
Add Comment