திருப்பதி லட்டில் கலப்படச் செய்தியை எல்லாரும் படித்திருப்போம். அந்த ஆய்வறிக்கையை எத்தனை பேர் படித்தோம்? தரமான பசு நெய்தானா எனப் பரிசோதித்தது அந்த ஆய்வு. தூய்மைத் தேர்வில் தேறவில்லை. கலப்படம் இருக்கலாம் என்பது யூகம்தானே ஒழிய உறுதி அல்ல என்கிறது அறிக்கை.
என்ன மாதிரியான கலப்படம் இருந்தால் இப்படி முடிவுகள் வரும் என்று ஒரு பட்டியல் கொடுத்திருக்கிறார்கள். சோயா பீன், சூரியகாந்தி, ஆலிவ் உள்ளிட்ட பல சாத்தியங்கள் உள்ளன. மீன் எண்ணெய், பசுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பும் கலப்படச் சாத்தியம் உள்ள பட்டியலில் உள்ளன. ஆய்வு தரமில்லை என்பதைச் சொல்கிறதே ஒழிய என்ன கலந்திருக்கிறது என்பதற்காகச் செய்த ஆய்வு கிடையாது.
பசுமாட்டின் உடலில் இருக்கும் கொழுப்பு அதன் பாலில் கலக்கத்தானே செய்யும். இதற்கு அறிவியல் ஆய்வெல்லாம் தேவையே இல்லை. மாட்டுக் கொழுப்பு என்றவுடன் மாட்டை வெட்டி அதன் கொழுப்பை எடுத்துக் கலப்படம் செய்ததுபோல காட்சிப்படுத்துகிறார்கள். நெய்யை விட மாட்டுக் கொழுப்பு விலை கூடுதல். ஐந்தாம் வகுப்பு மாணவர் கூட விலை குறைந்த பொருளைத்தான் கலப்படம் செய்வார்கள் என்று தெரிந்து வைத்திருப்பார்கள். அதைக் கூட யோசிக்காமல் உணர்வுப் பிழம்மாக மாறி பதற்றத்தைப் பற்ற வைக்கிறார்கள்.
அதோடு ஆய்வு அறிக்கையில் தெள்ளத் தெளிவாக இந்த முடிவுகள் தவறாக வரவும் சாத்தியம் உள்ளது என்கிறது. என்னவெல்லாம் இந்தத் தவறான முடிவைக் கொடுக்கக்கூடும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
Add Comment