கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கிய மணிப்பூர்க் கலவரம் எவ்வளவு தீவிரம் அடைந்து, எந்தளவுக்கு மோசமான விளைவுகளைத் தந்ததோ, அதே அளவு பாதிப்பினை இப்போதும் ஏற்படுத்தககூடுமெனத் தெரிகிறது.
மெய்தி இனத்தவருக்குப் பழங்குடி அந்தஸ்து வழங்குதல் தொடர்பாக அப்போது எழுந்த அதே பிரச்னைதான். அதே மெய்தி-குக்கி இன மோதல்தான். அதே துப்பாக்கிச் சூடு, தீ வைப்புச் சம்பவங்கள்தாம். அப்போது செய்ததைப் போலவே இப்போதும் மாநிலத்தின் கதவுகளை இழுத்துப் பூட்டிவிட்டார்கள்.
பெரும்பாலான பகுதிகளில் காலவரையறையற்ற ஊரடங்கு. இம்பால் பள்ளத்தாக்கு முழுவதிலும் தகவல் தொடர்பு துண்டிப்பு. பள்ளத்தாக்கில் மட்டுமல்லாமல், மலைப்பகுதி மாவட்டங்களான காங்போக்பி, சுராசந்த்புர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இணையத் துண்டிப்பு, மொபைல் டேட்டா துண்டிப்பு. பதற்றம் அதிகமுள்ள சில பிராந்தியங்களில் சாதாரணத் தொலைபேசித் தொடர்பும் கிடையாது. அனைத்தையும் மீறி மக்கள் ஊர்வலம் போய்க்கொண்டும் போராட்டம் செய்துகொண்டும் கலவரத்தில் ஈடுபட்டுக்கொண்டும் கோஷங்கள் எழுப்பிக்கொண்டும்தான் இருக்கிறார்கள்.
Add Comment